சென்னையில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் - உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.;

Update:2025-08-05 23:57 IST

சென்னை,

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற முகாம்களை பார்வையிட்டு மனுக்களை அளிக்க வந்த பொதுமக்களுடன் கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களின் கீழ் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் ஜூலை 15 முதல் நவம்பர் 2025 வரை அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 10,000 முகாம்கள் நடைபெறவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன. மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்கு சென்று, விண்ணப்பத்தினை பெற்று, பூர்த்தி செய்து தங்கள் விண்ணப்பத்தினை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக 15.07.2025 முதல் 14.08.2025 வரை "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் 109 முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகின்றன.

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சிறப்புத் திட்டமான "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலம், திருவல்லிக்கேணி பாரதியார் இல்லம், ராயபுரம் மண்டலம் செல்லப்பிள்ளையார் கோவில் தெரு எம்.எஸ்.மஹால் ஆகிய இடங்களில் இன்று (5.8.2025) நடைபெற்ற முகாம்களை தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு மனுக்களை அளிக்க வந்த பொதுமக்களுடன் கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாமன்ற ஆளும்கட்சி துணைத்தலைவர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், மாமன்ற உறுப்பினர் சிவ ராஜசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்