காஷ்மீரில் தங்கியுள்ள மாணவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் - வைகோ கடிதம்

இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.;

Update:2025-05-09 11:22 IST

சென்னை,

காஷ்மீர் போர்ப்பகுதிகளில் சிக்கியுள்ள தென் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை பாதுகாப்பாக மீட்டுவர உள்துறை மந்திரி அமித்ஷாவிற்கும், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு;

"தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூடு நாட்டின் எல்லைக்கு அப்பாலிருந்து தொடர்ந்து நடந்துவரும் சூழலில், ஸ்ரீநகர் ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களின் எதிர்கொண்டுள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலையையும் அவர்கள் படும் சொல்லொணா துயரத்தையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

உள்ளூர் மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டாலும், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். மேலும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். எனவே, அவர்களை அந்தந்த மாநிலங்களுக்கு பாதுகாப்பாக அழைத்து வருமாறு எனக்கு தனிப்பட்ட அழைப்புகள், மின்னஞ்சல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

போர் நடைபெறும் மண்டலத்திலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு உதவ தமிழக அரசும் தயாராக உள்ளது. எனவே, ஸ்ரீநகரில் உள்ள மாணவர் விடுதிகளில் இருந்து அம்மாணவர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு பாதுகாப்புடன் விரைவில் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அந்த கடிதத்தில் வைகோ குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்