வாக்காளர் பட்டியல் திருத்தம் வழக்கமான நடைமுறைதான் - ஜெயக்குமார் கருத்து
சீமான் ஆட்டை கடித்து மாட்டை கடித்து தற்போது அ.தி.மு.க.வை விமர்சித்து வருகிறார் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.;
சென்னை,
சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு பொய் பிரசாரத்தை அரங்கேற்றி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு முறை திருத்த பணிகளை நடத்துவது வழக்கமான ஒன்றுதான். 2002-2004 ஆண்டுகளுக்கு பிறகு இப்பணிகள் நடைபெறவில்லை.
அன்றைக்கு ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் - தி.மு.க. அப்போதெல்லாம் எதிர்க்காத தி.மு.க. தற்போது எதிர்க்கிறது. இறந்து போனவர்கள், போலி வாக்காளர்களை மட்டுமே நம்பியிருக்கிறது தி.மு.க. இதை எதிர்த்து தி.மு.க. கோர்ட்டுக்கு சென்றால் நாங்களும் கோர்ட்டை நாடுவோம்.
அ.தி.மு.க. எதையும் கண்மூடித்தனமாக வரவேற்காது. அதே நேரத்தில் அவசியமான ஒன்றை அ.தி.மு.க. வரவேற்கும். அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் என்பது கிடையாது. விஜய் கட்சியுடன் கூட்டணியா? என கேள்வி எழுப்பப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 5 அமாவசை உள்ளது. 2 அமாவாசைக்கு முன்பு கூட மாற்றம் வரலாம். எனவே அந்த நேரத்தில்தான் கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். சீமான் ஆட்டை கடித்து மாட்டை கடித்து தற்போது அ.தி.மு.க.வை விமர்சித்து வருகிறார். அவர் எங்களை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.