திருப்பத்தூரில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை; ஆந்திர போலீஸ்காரர் கைது
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வந்தனர்.;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நீலிக்கொல்லை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் இம்தியாஸ். இவர் வீட்டிற்குள் கடந்த 16ம் தேதி மர்ம நபர்கள் 4 பேர் நுழைந்தனர்.
வீட்டில் இருந்த இம்தியாஸ், பணியாளர் சக்திவேல் ஆகியோரை கட்டிவைத்துள்ளனர். பின்னர், இம்தியாசின் மனைவி சபிதாவை மிரட்டி வீட்டில் இருந்த பீரோவை திறந்துள்ளனர்.
பீரோவில் நகை, பணத்தை திருடிக்கொண்டிருந்தபோது இம்தியாசின் மனைவி வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து கூச்சலிட்டுள்ளார். அவரின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள், வீட்டில் கொள்ளையடிப்பதை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இம்தியாசின் விலை உயர்ந்த செல்போன்களை திருடிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வாணியம்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஆந்திராவை சேர்ந்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவின் திருமலா பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் அருண்குமார் இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளார். அவரை கைது செய்த போலீசார் அருண்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.