ரவுடி கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டு சிறை
சென்னை கவர்னர் மாளிகை முன் 2023-ம் ஆண்டில் 2 பெட்ரோல் குண்டுகளை வீசியதில் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார்.;
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு கடந்த 2023-ம் ஆண்டு அக்.25-ம் தேதி ரவுடி கருக்கா வினோத் (42) , பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கருக்கா வினோத்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த பெட்ரோல் குண்டையும் பறிமுதல் செய்தனர்.
அவர் மீது கிண்டி போலீஸார் பிணையில் வரமுடியாதபடி 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர் இதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், கிண்டி கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணை முடிந்த நிலையில் கருக்கா வினோத்திற்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டு சிறையுடன் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.