’தை பிறந்தால்...’ மெகா கூட்டணி குறித்து பேசிய ஆர்.பி.உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி மீது தினமும் அவதூறு பரப்புவதையே டிடிவி தினகரன் வேலையாக கொண்டிருப்பதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.;
மதுரை,
எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
”இன்றைக்கு ஆளும் மக்கள் விரோத திமுக அரசை பற்றி எதுவும் பேசாமல், தினந்தோறும் பத்திரிகையாளர்களை சந்தித்து தினகரன் ஏதேதோ கூறி வருகிறார். அவர் என்ன கூறுகிறார் என்று நாட்டு மக்களுக்கும் புரியவில்லை, அவருக்கும் புரியவில்லை. அவர் தொடங்கிய கட்சியை பற்றி பேசாமல், விஜயையும், திமுகவையும் தூக்கிப்பிடித்து பேசி வருகிறார். தற்போது வலிமையோடு வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கும் அதிமுக மீதும், எடப்பாடி பழனிசாமி மீதும் தினமும் அவதூறு பரப்புவதையே தினகரன் வேலையாக கொண்டிருக்கிறார்.
ஒரு கட்சி ஆரம்பித்தால், அதன் இலக்கு வானளவு வரை இருக்கும். நான் கட்சி ஆரம்பித்துள்ளேன், கவுன்சிலர் தான் ஆவேன்.. முதல்-அமைச்சர் ஆகமாட்டேன் என யாராவது ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பார்களா? மற்ற கட்சிகளை போல விஜய்யும் முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தொண்டர்களுக்கு எதிர்காலம் இருக்கிறது என்பதை தெரிவிக்கும் வகையில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என சொல்லியிருக்கிறார்.
நீங்கள் அன்புமணி ராமதாசிடம், உங்களுக்கு யார் போட்டி என கேட்டால், திமுகதான் போட்டி என கூறுவார். தேமுதிகவிடம் இதே கேள்வியை கேட்டால், பிரேமலதா விஜயகந்த்தும் தங்களுக்கு திமுகவே போட்டி என கூறுவார். இவ்வாறு, திமுகதான் தங்களுக்கு போட்டி என கூறும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் திமுகவை வீழ்த்த முடியும் என நாங்கள் கூறுகிறோம். தை பிறந்தால் வழி பிறக்கும். நல்லதே சிந்திப்போம். நல்லதே நடக்கும். எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி அமைப்பார்.”
இவ்வாறு அவர் பேசினார்.