ஓட்டலில் ரூ.2 லட்சம் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், எட்டயபுரத்தில் கோவில்பட்டி பிரதான சாலை ஓரத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார்.;

Update:2026-01-24 18:47 IST

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் செண்பகநகர் பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் கருப்பசாமி (வயது 43), எட்டயபுரத்தில் கோவில்பட்டி பிரதான சாலையோரத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் வழக்கமாக இந்த ஓட்டலில் இரவு வியாபாரம் முடிந்த பிறகு உள்புறம் உள்ள கண்ணாடி கதவை பூட்டுவதுடன், வெளிப்புறத்திலுள்ள ஷட்டர் கதவை மூடிவிட்டு செல்வது வழக்கமாம்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பிறகு, கருப்பசாமி கல்லாபெட்டியில் ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 875 பணத்தை வைத்துள்ளார். பின்னர் வழக்கம் போல் வெளிப்புற ஷட்டரை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று அதிகாலையில் ஓட்டலுக்கு அவரது மாமனார் சென்றுள்ளார். அப்போது கல்லாபெட்டி திறந்து கிடந்துள்ளது. அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் அங்காளஈஸ்வரி, செந்தில்வேல், முருகன் மற்றும் போலீசார் சம்பவ நடந்த ஓட்டலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ஓட்டலில் பதிவாகியிருந்த மர்ம நபரின் கைரேகைகளை பதிவு செய்து ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.

இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தினமும் இந்த ஓட்டலின் வெளிப்புற ஷட்டர், கண்ணாடி கதவு உள்ளிட்டவைகள் பூட்டப்படாமல், மூடி விட்டு ெசல்வதை நோட்டமிட்ட மர்ம நபர் கைவரிசை காட்டியிருப்பதாக தெரிய வந்ததுள்ளது. இந்த பின்னணியில் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை அப்பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவைீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்