திமுக ஆட்சி மீண்டும் வராது.. துரோகங்களுக்கு தண்டனை உறுதி - அன்புமணி
பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்பது ஏமாற்று வேலை என அன்புமணி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர சிறப்பாசிரியர்கள் 13 ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க முடியாது என்றும், பிற அரசு பணிகளில் சேர அவர்கள் விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். பகுதிநேர சிறப்பாசியர்களை ஏமாற்றுவதற்கான இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.
பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்பது திமுக பிராண்டு ஏமாற்று வேலை ஆகும். பகுதி நேர சிறப்பாசிரியர்களாக பணியாற்றி வரும் சுமார் 12,500 பேரில் பெரும்பான்மையினர் 45 வயதைக் கடந்தவர்கள் ஆவர். அவர்களில் கணிசமானவர்கள் பிற அரசு வேலைகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான வயது வரம்பைக் கடந்து விட்டவர்கள். அவர்களால் சிறப்பாசிரியர் பணிக்கு மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், கடந்த பல பத்தாண்டுகளாக சிறப்பாசிரியர் பணிக்கு நிரந்தர ஆசிரியர்கள் தேர்ந்தடுக்கப்படவே இல்லை. அவ்வாறு இருக்கும் போது பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்குவதால் எந்த பயனும் இல்லை.
பகுதி நேர சிறப்பாசியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியாக இருந்த போது போராடியது திமுக அரசு. ஆட்சிக்கு வந்தால் பணிநிலைப்பு செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது திமுக. இப்படி அவர்களை நம்ப வைத்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்னர் ஐந்தாண்டுகளாக அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டு, இப்போது பணி நிரந்தரம் வழங்க முடியாது ; சிறப்பு மதிப்பெண் தான் வழங்க முடியும் என்பது மிகப்பெரிய துரோகம் ஆகும். இதை பகுதி நேர ஆசிரியர்கள் மன்னிக்க மாட்டார்கள்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு துரோகம் செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மீண்டும், மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று சட்டப்பேரவையில் வீரவசனம் பேசியிருக்கிறார். அவர் எந்த அளவுக்கு மாய உலகில் மூழ்கிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு இது தான் சான்று ஆகும்.
தமிழ்நாடு மிகவும் அறிவார்ந்த மாநிலம், தமிழ்நாட்டு மக்கள் மிகவும் அறிவார்ந்தவர்கள். திமுகவைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ள மாட்டார்கள். வரும் தேர்தலில் திமுக அரசு அகற்றப்படுவது உறுதி. புதிய அரசு அமைந்த பிறகு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.