சேலம்: ஓடும் ரெயிலில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
சேலம்,
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கோலாத்துகோம்பை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். அவருடைய மனைவி அஞ்சலம் (வயது 70). இவர் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சேலத்துக்கு சென்னை- மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்து கொண்டிருந்தார். அவர் முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டியில் பயணம் செய்தார்.
இந்த ரெயில் காட்பாடி ரெயில் நிலையம் வந்த போது அங்கிருந்த 2 வாலிபர்கள் அஞ்சலம் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவான காட்சிகள் மூலம் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.