தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காண வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள்

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது முதல்-அமைச்சர் தலையிட்டு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.;

Update:2025-11-28 15:12 IST

கோப்புப்படம் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை மண்டலம் 5, 6-ல் ஒன்றிய என்.யு.எல்.எம் திட்டத்தின்படி தினக்கூலி அடிப்படையில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள், பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசு 2017-ல் அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை பெற்று பணியாற்றி வந்தனர். இந்த நிலையில்,  நிரந்தரப்படுத்தப்படுவதற்கான தகுதி பெற்ற இந்தத் தொழிலாளர்களின் ஊதியத்தை குறைத்ததுடன், ஏற்கனவே பணிபுரிந்த பல்லாண்டு பணி தொடர்ச்சி உள்ளிட்ட அனைத்தையும் பறித்து, தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் பணியாற்றச் செல்லுமாறு சென்னை மாநகராட்சி நிர்வாகம் நிர்பந்தித்தது. அதனை எதிர்த்து இத்தொழிலாளர்கள் போராடினர்.

மிகவும் நியாயமான அவர்களது கோரிக்கைகள்  நிறைவேற்றப்படவில்லை. அவர்களின் வேலைகள் பறிக்கப்பட்டதால், கடுமையான வாழ்க்கை நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். நிராதரவாக விடப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த பன்னிரண்டு நாட்களாக, சென்னை அம்பத்தூரில் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராடும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலையிட வேண்டும். போராடும் தொழிலாளர்களின் சங்கத்துடன் பேசி சுமூகத் தீர்வு காண தக்க நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்