மகளுக்கு பாலியல் தொல்லை: ரெயில்வே ஊழியருக்கு 17 ஆண்டுகள் சிறை
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரெயில்வே ஊழியருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.;
கோப்புப்படம்
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 43 வயதுள்ள ரெயில்வே ஊழியர். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். பெற்ற மகள் என்றும் பாராமல் ரெயில்வே ஊழியர் 7-ம் வகுப்பு படித்து வந்த தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த மனைவி திருவொற்றியூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்தார்.
இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் விஜயலட்சுமி ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி உமா மகேஸ்வரி, பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் ரெயில்வே ஊழியருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் அரசு நிவாரணம் வழங்கிடவும் பரிந்துரை செய்தார். இதையடுத்து ரெயில்வே ஊழியரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.