டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை கொடுத்து ரூ.10 திரும்ப பெறும் திட்டம் - சென்னையில் இன்று முதல் அமல்
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
சென்னையில் இன்று முதல் காலி மது பாட்டில்களை கொடுத்து ரூ.10 திரும்ப பெறும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தின் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட சென்னை வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
“வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசுவதை தவிர்க்கும் பொருட்டு, அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டம் சென்னை வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்டத்தில் அமல்படுத்தப்படுகிறது.
இதன்படி, மதுபாட்டில்களை வாங்கும்போது மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாகப் பெற்று, மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களைத் திரும்ப அதே மதுபான விற்பனைக் கடையில் ஒப்படைக்கும்போது ஏற்கனவே செலுத்திய ரூ.10-ஐ திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் நோக்கம், காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதாகும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.