இலங்கைக்கு இனிமேல் வாரத்தின் 7 நாட்களும் கப்பல் சேவை
ஏற்கனவே 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், வாரத்தின் 7 நாட்களும் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
நாகை,
இந்தியா - இலங்கை இடையே வர்த்தகம், சுற்றுலா மேம்பட, நாகையில் இருந்து, இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணியர் கப்பல் சேவையை, கடந்த ஆண்டு, அக்., 14ல் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, இந்திய கப்பல் கழகத்துக்கு சொந்தமான, 'சிரியாபாணி' என்ற கப்பல், சேவையை துவக்கியது. பருவநிலை மாற்றத்தால் சில தினங்களில் சேவை நிறுத்தப்பட்டது. பின், இந்த கப்பல் போக்குவரத்து சேவை, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 150 பேர் பயணிக்கும் வகையில் 'சிவகங்கை' என்ற சிறிய கப்பல், கடந்த ஆண்டு, ஆக., 16ல் முதல் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், நாகை - காங்கேசன்துறை இடையிலான பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தின் 7 நாட்களும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், வாரத்தின் 7 நாட்களும் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.