தி.மு.க.வில் இணைகிறேனா..? - முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பதில்

தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவீர்களா? என்ற கேள்விக்கு, முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பதில் அளித்துள்ளார்.;

Update:2026-01-22 07:39 IST

கோப்புப்படம்

திருச்சி,

திருச்சியை சேர்ந்தவர் வெல்லமண்டி நடராஜன். இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டபோது இவர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாறினார்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தி.மு.க.வில் இணைந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தி.மு.க.வில் நான் இணைவதாக கூறுவது தவறான தகவல் என்று முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் திருச்சியில் தான் இருக்கிறேன். வேறு எங்கும் செல்லவில்லை. எனக்கு தி.மு.க.வில் சேரும் எண்ணம் இல்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தொடர்ந்து பயணிப்பேன்.

அவர் எந்த முடிவு எடுத்தாலும் அது ஆணித்தரமான, நிரந்தரமான முடிவாக இருக்கும் என கருதுகிறேன். கூட்டணி குறித்து கருத்து சொல்லும் பெரிய இடத்தில் நான் இல்லை. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் என்னிடம் எதுவும் பேசவில்லை. அ.தி.மு.க.வில் 5 முறை மாவட்ட செயலராகப் பதவி வகித்துள்ளேன். 16 ஆண்டுகள் அவைத் தலைவராகவும் இருந்துள்ளேன்” என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவீர்களா? என்ற கேள்விக்கு இப்போது பதில் சொல்ல முடியாது. அதற்கு இன்னும் நிறைய காலம், நேரம் இருக்கிறது” என்று வெல்லமண்டி நடராஜன் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்