திருச்சி-சென்னை இடையே கூடுதல் விமான சேவை
திருச்சி-சென்னை இடையிலான விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் அதிகரித்துள்ளது.;
திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு கடந்த டிசம்பர் 16-ந் தேதி வரை தினமும் இண்டிகோ நிறுவனம் 7 சேவைகளை வழங்கி வந்தது. இந்த நிலையில் திடீரென சேவைகளை ரத்து செய்து காலை மற்றும் மாலை என 2 சேவைகளை மட்டுமே இயக்கியது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில் திருச்சியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சிக்கும் விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் அதிகரித்துள்ளது. தற்போது, 4 சேவைகளாக இயக்குகிறது. சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு காலை 7.10 மற்றும் காலை 10.10 மணிக்கும், அதனைத் தொடர்ந்து மதியம் 2.35 மணி, மாலை 5.25 மணிக்கு வந்தடையும் வகையில் விமானம் இயக்கப்படுகிறது.
அதேபோன்று திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை 7,35 மணி, 10.35 மணி மற்றும் நண்பகல் 2.55 மணி, மாலை 5.55 மணி ஆகிய நேரங்களில் விமானங்கள் இயக்கப்படுகிறது. இதனால் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.