புத்தரை பயன்படுத்தி தமிழர் பகுதிகளில் சிங்கள மேலாதிக்கத்தை நிறுவ முயலும் இலங்கை அரசு - ராமதாஸ் கண்டனம்

இந்திய அரசும், சர்வதேச நாடுகளும் தலையிட்டு ஈழத் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.;

Update:2025-11-22 15:49 IST

கோப்புப்படம் 

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இலங்கையில் புத்தரை பயன்படுத்தி தமிழர் பகுதிகளில் சிங்கள மேலாதிக்கத்தை நிறுவ முயலும் இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கம் கண்டிக்க வேண்டும்.

இலங்கையில் ஈழத்தமிழர்கள் பெரும்பகுதியாக வாழும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் கடந்த 16-ம் தேதி அங்குள்ள கடற்கரையோரம் திடீரென ஒன்று திரண்ட பௌத்த பிக்குகளும், பௌத்த பக்தர்களும் புத்தர் விகாரையொன்றை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டி, புத்தர் சிலையொன்றை நிறுவியுள்ளனர். அதற்கு தமிழ் மக்களும், தமிழ்த் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காவல் துறையினர் அங்கிருந்து சிலையை அப்புறப்படுத்தினர். ஆனால் இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்கள, பௌத்தவாதிகள் புத்தர் சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்று கூறியதையடுத்து அடுத்த நாளே காவல்துறை பாதுகாப்புக்கு மத்தியில் காவலர்களின் கைகளாலேயே கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை மீண்டும் அங்கு நிறுவப்பட்டுள்ளது. இந்த விவகாரம் திருகோணமலை மட்டுமல்லாமல் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இலங்கை அரசாங்கம் வழக்கம்போல தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தின் இந்த அத்துமீறல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திருகோணமலை ராவணனால் வழிபட்ட புகழ்பெற்ற தலமாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், கி.மு.150ம் ஆண்டில் வாழ்ந்த தமிழ் மன்னன் எல்லாளனால் வழிபடப்பட்ட இடமாகவும் கருதப்படுகிறது. இங்குள்ள தொன்மையான சிவன் கோவிலான திருக்கோணேஸ்வரம் , இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள இந்துக்கள் மற்றும் தமிழர்களிடையே பரவலாக அறியப்பட்டதாக உள்ளது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற இந்த தலம் இந்து மதத்தை பின்பற்றும் ஈழத் தமிழ் மக்களுக்கு புனிதமான நகரமாகவும் கருதப்படுகிறது.

1987-ல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிகமாக இணைத்து நிர்வகிக்கப்படுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தலைநகரமாகத் திருகோணமலையே விளங்கியது. இது தமிழர்களால் கோரப்பட்ட தனிநாடான தமிழீழத்தின் தலைநகராகவும் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. தமிழர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் வாழ்ந்த இந்நகரில் பௌத்த விகாரை நிறுவுவது என்பது தமிழர்களின் மத நம்பிக்கையையும், கடவுள் வழிபாட்டு உரிமைமையும் சீர்குலைக்கின்ற செய்கையாகும்.

திருகோணமலை துறைமுகம் ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய துறைமுகமாகவும், முக்கிய வணிக மையமாக திகழ்ந்தது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் சிங்களர்களின் ஆதிக்கத்தை முழுமையாக நிறுவுவதற்கும், தமிழர்களை முழுமையாக அப்புறப்படுத்துவதற்குமான நடவடிக்கையாகவே இதை கருத முடிகிறது.

தமிழர் பகுதிகளில் சிங்கள ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளும் நோக்கில் ஏற்கனவே மெல்ல மெல்ல சிங்களர்களை குடியமர்த்தி வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் தற்போது அவற்றை உறுதி செய்யும் விதமாக தமிழர் பகுதிகளில் பௌத்த விகாரைகள், சிலைகளை நிர்மாணித்து வருவதாகவும் தமிழர்கள் கூறுகின்றனர்.

30 வருடம் போர் நடைபெற்ற காலத்தில் கூட வடக்கு கிழக்கு பகுதிகளில் பௌத்த சின்னங்களை போராளிகள் அழிக்கவில்லை. சிங்களர்களின் மத உரிமையையும், வழிபாட்டு உரிமையையும் மதித்தனர். ஆனால் அமைதியையும், அன்பையும், ஆசையை துறக்கும் தத்துவத்தையும் போதித்த புத்தரின் பெயரால் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கலாச்சார படையெடுப்பை நடத்தி, தமிழர்களை அப்புறப்படுத்த நினைக்கும் பேராசையுடன் சிங்கள பௌத்த இனவாதிகள் செயல்படுகின்றனர்.

மத திணிப்பின் மூலம் தமிழர்களின் வழிபாட்டு உரிமையை அழிக்க நினைக்கும் இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கமும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் வன்மையாக கண்டிப்பதுடன், தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை இனப்படுகொலை மூலம் அழித்த நிலையிலும் கூட, அம்மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத அளவுக்கு சிங்கள அரசாங்கம் தொடர்ந்து செயல்படுகிறது. எனவே இந்திய அரசும், சர்வதேச நாடுகளும் தலையிட்டு ஈழத் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு கூட்டாட்சி முறையிலான தன்னுரிமை கொண்ட பிரதேசமாக மலர வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்