ஏ.சி. ரெயில் பெட்டிகளில் போர்வை, படுக்கை விரிப்புகளை எடுத்து செல்வதை தடுக்க தீவிர கண்காணிப்பு

போர்வை, படுக்கை விரிப்புகளை பயணிகள் எடுத்து செல்வதை தடுக்க கண்காணிக்குமாறு ஊழியர்களுக்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.;

Update:2025-09-22 06:36 IST

நீண்டதூர ரெயில்களில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு ஏ.சி. வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு போர்வை, ஒரு தலையணை, 2 படுக்கை விரிப்புகள், முகம் துடைக்க ஒரு துண்டு ஆகியவை ரெயில்வே சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. ரெயில்வேக்கு சொந்தமான இந்த பொருட்களை பயணிகள் தங்கள் பயணத்தின்போது பயன்படுத்திவிட்டு, இறங்கும்போது அப்படியே விட்டு செல்லவேண்டும்.

ஆனால் டெல்லி, ஒடிசா உள்ளிட்ட வடமாநிலங்களில் சிலர் அதனை தங்களது உடைமைக்குள் மறைத்து வைத்து எடுத்து செல்கின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. போர்வை, படுக்கை விரிப்புகள், கண்ணாடி என ரெயில் பெட்டியில் இருந்து எடுத்து செல்லப்படும் பொருட்களால் ரெயில்வேக்கு ஆண்டுதோறும் சராசரியாக ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது.

இதையடுத்து நீண்டதூர ரெயில்களில் குளிர்சாதன பெட்டிகளில் பயணிகளுக்கு பயன்படுத்த வழங்கப்படும் போர்வை, படுக்கை விரிப்புகள், துண்டு உள்ளிட்டவை அதே எண்ணிக்கையில் இருக்கிறதா? என்பதை கண்காணிக்க வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அதாவது ரெயில் புறப்படும் இடத்தில் இருந்து, கடைசியாக வந்து சேரும் ரெயில் நிலையத்துக்கு முன்பு அவற்றை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்