மாணவி பாலியல் வன்கொடுமை: அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணையம் நேரில் விசாரணை

மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணையம் நேரில் விசாரணை நடத்தி வருகிறது.;

Update:2024-12-30 09:57 IST

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வெளியாட்கள் யாரும் அனுமதியின்றி உள்ளே செல்லாதபடி, முறையான சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல், பல்கலைக்கழக வளாகத்தில் 140 காவலாளிகள் ரோந்து பணியில் 3 'ஷிப்டு' அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தின் உறுப்பினர்கள் மம்தா குமாரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சித் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் பாதுகாப்பு குறைபாடாக விளங்கக்கூடியவை எவை என்பது குறித்து ஆணையத்தின் உறுப்பினர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.

மாணவியின் முழு விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்தும் ஆணையம் விசாரணை நடத்துகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடம் குழுவினர் பேசவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்