ஆசிரியர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய கோரி மாணவிகள் சாலை மறியலால் பரபரப்பு

விளாத்திகுளம், புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி இயற்பியல் ஆசிரியர் தியாகராஜனை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.;

Update:2025-11-21 03:15 IST

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் இயற்பியல் முதுகலை ஆசிரியர் தியாகராஜன் மீது தொடுக்கப்பட்ட வழக்கு பொய்யானது எனவும் தங்களது ஆசிரியர் குற்றமற்றவர் எனவும் கூறி சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென அப்பள்ளி மாணவ மாணவிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

கடந்த 13.10.2025 அன்று இந்த பள்ளியில் படிக்கும் வேளாண்பிரிவு மாணவ மாணவியர்களை இயற்பியல் முதுகலை ஆசிரியர் தியாகராஜன் என்பவரும், ஆங்கில முதுகலை ஆசிரியர் ஐஸ்வர்யா என்பவரும் சென்னமரெட்டிபட்டி கிராமத்திற்கு கள ஆய்விற்காக அழைத்துச் சென்ற போது, அங்கு ஆசிரியர் தியாகராஜன் சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அந்த புகார் மீது தலைமையாசிரியர் அன்னை ஷீபா பிளவர் லைட் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறி ஆசிரியர் தியாகராஜன் மற்றும் தலைமையாசிரியர் மீதும் பள்ளிக் கல்வித்துறையால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இயற்பியல் ஆசிரியர் தியாகராஜனை கைது செய்யும் பொருட்டு அதிரடிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக ஆசிரியர் தியாகராஜன் குற்றமற்றவர் எனவும், பள்ளியில் பணிபுரியும் சில ஆசிரியர்களின் தூண்டுதலினால் தான், பொய்ப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி மாணவிகள் சிலர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்யாதது ஏன்? என்று இந்திய மாணவர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் மாடசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் என்ற ஹென்றி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போக்சோ உட்பட ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தும், இன்று வரை கைது செய்ய முடியவில்லையே ஏன்? இது போலீசாரின் நிர்வாக தோல்வியா? திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான பொற்காலம் என்று மார்தட்டிக் கொள்ளும் சமூக நீதி அரசு தமிழ்நாட்டில் தொடர்ந்து பெண்களுக்கு அரங்கேறும் பாலியல் கொடுமைகளுக்கு தீர்வு காணுமா?

பள்ளிக் கல்வித் துறையே!! மாவட்ட காவல்துறையே!! மாவட்ட நிர்வாகமே!! உடனடியாக இயற்பியல் ஆசிரியர் தியாகராஜனை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகள் புகார் தெரிவித்தும் அலட்சியமாக செயல்பட்டு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியை சீபா ஃபிளவர் லைட்யை துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும் இதுபோன்று பாலியல் பிரச்சினைகளை தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பாக வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் தெவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்