ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்: ரூ.43½ லட்சம் அபராதம், வரி வசூல் - போக்குவரத்து ஆணையர் தகவல்

ஆம்னி பஸ்களில் 50 சதவீதம் மட்டுமே கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.;

Update:2025-10-18 01:39 IST

சென்னை,

போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் போக்குவரத்து ஆணையர் தலைமையில் காவல் துறை, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் கடந்த 14-ந்தேதி மாநில போக்குவரத்து ஆணையரகத்தில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான பயணங்களை சிரமமின்றி மேற்கொள்ளவும், அதே சமயத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் சென்றுவர கூடுமான வரை வேண்டாம் எனவும் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆம்னி பஸ்களில் 50 சதவீதம் மட்டுமே கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.

மேலும், பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு அதனை கண்காணிக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் உள்ள 12 சரகங்களில் சிறப்பு பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு 16-ந்தேதி முதல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்மூலம் இதுவரை 357 சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு ரூ.43 லட்சத்து 55 ஆயிரத்து 961 அபராதம் மற்றும் வரியாக பெறப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு தனியார் முன்பதிவு ஆன்லைன் செயலிகள் கண்காணிக்கப்பட்டு அதிகமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ள ஆம்னி பஸ்களை கண்டறிந்து கட்டணங்களை குறைக்க அறிவுறுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்