நடத்தையில் சந்தேகம்: காதல் மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் - போலீசார் விசாரணை
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்த கணவரை போலீசாா் கைது செய்தனர்.;
கோப்புப்படம்
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே உள்ள வீரமார்த்தண்டன் புதூரை சேர்ந்தவர் சுரேஷ் (41 வயது). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல இருசக்கர வாகன ஷோரூமில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அனுஷா ஜாஸ்மின் (33 வயது), நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சுரேசுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அனுஷா ஜாஸ்மின் கணவரை விட்டு பிரிந்து 2 குழந்தைகளுடன் தம்மத்துகோணம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இதையடுத்து ஒரு வாரத்துக்கு முன் சுரேஷ், மனைவியிடம் சமாதானம் பேசி உணவு மட்டும் சமைத்து தரவேண்டும். இனி தகராறு செய்ய மாட்டேன், ஒற்றுமையாக வாழலாம் என ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய அனுஷா ஜாஸ்மின், காதல் கணவர் திருந்திவிட்டார் என்று நினைத்து சேர்ந்து வாழ சம்மதித்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சுரேஷ், மனைவியை போனில் தொடர்புகொள்ள முயன்றார். அப்போது செல்போன் பிசியாக இருந்ததாக கூறப்படுகிறது. உடனே வீட்டுக்கு வந்த சுரேஷ், மனைவியிடம் நீ யாரிடம் பேசினாய்? எனக்கேட்டு தகராறு செய்தார்.
ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த சுரேஷ், வெளியே செல்வதாக கூறிவிட்டு, திடீரென சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து அனுஷா ஜாஸ்மினின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் படுகாயமடைந்து நிலைதடுமாறி கீழே விழுந்த அனுஷா ஜாஸ்மின் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் சுரேஷ் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
அனுஷா ஜாஸ்மின் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அனுஷா ஜாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் சுரேசை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.