தமிழ் மொழி சரித்திர புகழ் வாய்ந்தது: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பேச்சு

சட்டம் தொடர்பான ஆராய்ச்சியில் வக்கீல்கள் ஈடுபடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சூர்ய காந்த் கூறினார்.;

Update:2025-08-24 09:31 IST

திருச்சி,

திருச்சி வக்கீல் சங்கம் சார்பில் தனியார் ஓட்டலில் நேற்று மின்னணு நூலக மையம் தொடக்க விழா நேற்று நடந்தது. சங்க தலைவர் எஸ். பி.கணேசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இந்த விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சூர்ய காந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மின்னணு நுாலகத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பல ஆண்டு அனுபவம் கொண்ட திருச்சி வக்கீல் சங்கம் பல புகழ் வாய்ந்த வக்கீல், நீதிபதிகளை உருவாக்கியுள்ளது. சட்டத்துறையில் புகழ் பெற்று விளங்கிய பாலசுந்தரம் பெயரில் தொடங்கி வைக்கப்பட்ட மின்னணு நுாலகத்தை இளம் வக்கீல்கள் பயன்படுத்தி தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ் மொழி சரித்திர புகழ் வாய்ந்தது. தமிழ் மறை திருக்குறளில் கூறப்படாத தகவல்கள் எதுவும் கிடையாது. அடுத்த முறை திருச்சி வரும் போது இனிமையான தமிழ் மொழியில் பேச முயற்சிக்கிறேன்.

அதேபோல இங்கு தொடங்கப்பட்ட தரவு தளத்தை பயன்படுத்தி இதற்கு முன்பு வழங்கப்பட்ட தீர்ப்புகள், வழக்கு விவரங்களை இளம் வக்கீல்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மூத்தவர்களின் அனுபவங்கள் வளரும் தலைமுறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும். பல்வேறு நீதிமன்றங்களில் நடக்கும் அன்றாட செய்திகளை வக்கீல்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சட்டம் தொடர்பான ஆராய்ச்சியில் வக்கீல்கள் ஈடுபடவேண்டும்.

வாழ்நாள் முழுவதும் கல்வி பயிலுவது, தகவல்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.நான் சட்டம் முடித்து முதல் முறையாக கோர்ட்டுக்கு சென்ற போது எனது சீனியர் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் மெட்ராஸ் ஜர்னல் எனும் புத்தகத்தை நாள்தோறும் படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பாரம்பரிய புகழ் கொண்ட சென்னை ஐகோர்ட்டு பல சிறந்த வக்கீல்கள், நீதிபதிகளை உருவாக்கிய பெருமை கொண்டது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்