டெங்கு பாதிப்பை தடுக்க நடவடிக்கை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு உத்தரவு

கருப்பு நிறம், வெள்ளை கோடுகள் கொண்ட கொசு டெங்கு நோயை பரப்புகிறது.;

Update:2025-10-10 05:58 IST

சென்னை,

தமிழகத்தில் டெங்கு நோய் அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிகம் காணப்படுகிறது. அதற்கு காரணம் மழை பெய்த பிறகு வீடுகளிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் நீர் தேங்கி நிற்கும். அந்த நல்ல நீரில், டெங்கு நோயை உருவாக்கும் ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்கள் அதிகம் பெருகுகின்றன. குறிப்பாக பூந்தொட்டி, பழைய டயர்கள், பிளாஸ்டிக் குவளைகள், நீர்த் தொட்டிகள், தேங்கிய குடிநீர் போன்ற இடங்களில் இந்தக் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. கருப்பு நிறம், வெள்ளை கோடுகள் கொண்ட கொசு டெங்கு நோயை பரப்புகிறது.

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் திடீரென உயர் காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களின் பின்புறம் வலி, மூட்டு, தசை வலி, தோலில் சிவப்பு புள்ளிகள், வாந்தி, சோர்வு போன்ற அறிகுறிகள் இருக்கும். உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே காய்ச்சலை அசட்டையாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

டெங்கு நோய் வந்த பின் சிறப்பு மருந்து எதுவும் இல்லை. எனவே தடுப்பதே சிறந்த வழியாகும். எனவே கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க வேண்டும். நல்ல நீரில் தான் இந்த கொசுக்கள் வளரும். எனவே வீட்டில், வெளியில் நீர்த் தொட்டிகள், பூந்தொட்டிகள், டயர்கள், பழைய குடுவைகள் போன்றவற்றில் தண்ணீர் தேங்க விடக்கூடாது. வாரம் ஒருமுறை இவை அனைத்தையும் காலி செய்து சுத்தம் செய்ய வேண்டும்.

ஒருவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனே டாக்டரை அணுக வேண்டும். காய்ச்சல், சோர்வு, ரத்தப்போக்கு இருந்தால் தாமதிக்காமல் சிகிச்சை பெற வேண்டும். நிறைய தண்ணீர், ஜூஸ், கனிகள் சாப்பிட வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

எனவே தமிழக அரசு, வந்த பிறகு நடவடிக்கை என்பதற்கு பதிலாக டெங்கு வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்படி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்