சாலை விபத்தில் ஆசிரியை பலி - ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

விழுப்புரத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.;

Update:2025-09-20 18:00 IST

விழுப்புரம்,

விழுப்புரத்தில் நடந்த சாலை விபத்தில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

”சென்னையில் இன்று (20.9.2025) நடைபெற்ற ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக நான்கு அரசுப் பள்ளி ஆசிரியைகள் தங்கள் கணவர்களுடன் சென்னைக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது அவர்களின் கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளாது. இதில் ஆசிரியை உட்பட இருவர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மேலும், இந்த விபத்தில் காயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆறு பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்