110 ஆண்டுகளை நிறைவு செய்த பழைய பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிப்பு
புதிய ரெயில் பாலம் கடந்த 2020-ம் ஆண்டு கட்டும் பணி தொடங்கப்பட்டது.;
சென்னை,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தீவு நிலப்பகுதியையும், பாம்பனையும் இணைக்கும் வகையில் 2.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலில் ரெயில் மேம்பாலம் கடந்த 1914-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த பாலமானது கடல் பகுதியை கடந்து செல்லும் பெரிய படகுகள், கப்பல்கள் ஆகியவற்றுக்காக இரு பிரிவாக பிரிந்து தூக்கி பின் தண்டவாள நிலையில் பொருத்தும் வகையில் அமைக்கப்பட்டது. 110 ஆண்டுகளை நிறைவு செய்த முதல் கடல் பாலம் பழைய பாம்பன் ரெயில் பாலம் ஆகும். இந்த பாலமானது சேதம் அடைந்ததையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு முதல் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் அருகே புதிய ரெயில் பாலம் கடந்த 2020-ம் ஆண்டு கட்டும் பணி தொடங்கப்பட்டது. அதில் லிப்ட் வகை தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி இந்த புதிய தூக்கு பாலத்தை திறந்துவைத்தார். தற்போது ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.இந்தநிலையில், பழைய தூக்கு ரெயில் பாலத்தை அகற்றுவதற்காக, டெல்லியில் உள்ள ரெயில் விகாஸ் நிகாம் நிறுவனம் சார்பில் (ஆர்.வி.என்.எல்.) அதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் பழைய பாம்பன் பாலத்தின் மொத்த தொகையாக ரூ.2.81 கோடி நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு ஒப்பந்தப்புள்ளி கோருவோர் ரூ.5.62 லட்சம் முன்வைப்புத் தொகை செலுத்தவும் கோரப்பட்டுள்ளது.
ஒப்பந்தப்புள்ளி கோரியவர்களுக்கான கலந்தாய்வு வரும் 26-ந்தேதி நடைபெறவுள்ளதாகவும், அதன்படி 4 மாதங்களில் பணி தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் ரெயில் விகாஸ் நிகாம் நிறுவன சென்னை பிரிவின் தரப்பில் கூறப்பட்டது.