ஆதரவு வழங்கிய தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி - செங்கோட்டையன்
அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து நேற்று செங்கோட்டையனை நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.;
சென்னை,
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நேற்று முன்தினம் 5ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதையடுத்து நேற்று 6 தேதி கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவில் வகித்து வந்த அமைப்புச்செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகிய பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
கோபி சட்டமன்ற தொகுதியில் அதிமுக ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்த சிலரையும் நீக்கினார், இந்த நிலையில் கோபி சட்டமன்ற தொகுதியில் பதவி வகித்து வரும் ஒன்றிய, நகர, கிளை, கழக, பேரூர் கழக, வார்டு செயலாளர்கள் என சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் நேற்று (செப்டம்பர் 06) நம்பியூர் பகுதியில் கே.ஏ.செங்கோட்டையனுக்கு ஆதரவாக தங்களுடைய கட்சி பதவியையும் ராஜினாமா செய்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்று (செப்டம்பர் 07) கோபி அதிமுக கட்சி அலுவலகத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்சி பதவியை ராஜினாமா செய்து கட்சியின் பொதுச் செயலாளர் அவர்களுக்கு இரண்டாவது நாளாக கடிதம் அனுப்பி வருகின்றனர்.
இந்தநிலையில், கோபி செட்டி பாளையத்தில் செய்தியாளர் சந்திப்பில் செங்கோட்டையன் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் ஆதரவு தெரிவித்து வரும் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. அதிமுகவின் எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் நேற்றும், இன்றும் தொடர்ந்து என்னை வந்து சந்திக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். நாளை மறுநாள் முக்கிய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்திக்கிறார் செங்கோட்டையன். தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.