14-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த தந்தி டி.வி... தலைவர்கள் வாழ்த்து
14-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள தந்தி டி.வி.க்கு பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.;
சென்னை,
பிரதமர் மோடி
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘தந்தி டி.வி. 14-வது ஆண்டு விழாவை கொண்டாடும் செய்தியறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். தந்தி டி.வி.யின் இந்த பயணத்தில் பங்கேற்ற அனைவரையும் வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
தாய் மொழிப்பற்று, மொழி உணர்வை ஊட்டும் தூண்டுகோலாகத் திகழும் தந்தி டி.வி. இன்னும் பல ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்ய மனமாற வாழ்த்துகிறேன்' என்று கூறியுள்ளார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘83 ஆண்டுகள் பழமை வாய்ந்த தந்தி குழுமத்தின் தந்தி டி.வி. தொடங்கியதில் இருந்து தமிழ் ஊடகத்துறையில் சிறப்பான பங்களிப்பை கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களிடையே உறுதியான பிணைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சீரிய சாதனைக்கு சொந்தக்காரர்களான, தந்தி டி.வி.யின் அர்ப்பணிப்பு மிக்க செய்தியாளர்கள், பணியாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடுநிலையாக செய்திகளை வழங்கி, “ஆயுத எழுத்து”, “மக்கள் மன்றம்”, “கேள்விக்கென்ன பதில்” போன்ற நிகழ்ச்சிகள் வழியாக தந்தி டி.வி. தொடர்ந்து நாட்டின் பிம்பத்தை பிரதிபலிக்கிறது. இதுவரை கேட்காத குரல்களுக்கும் மேடை அமைத்து கொடுத்திருக்கும் தந்தி டி.வி. தமிழ் ஊடக உலகின் பெருமையாக தொடர்ந்து விளங்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
பெருமதிப்பிற்குரிய சி.பா.ஆதித்தனார் காட்டிய ஊடக வழியில், தந்தி டி.வி. செய்திகளை வழங்கி வருவது சிறப்பானது. தந்தி என்றால், அனைத்து தரப்பு மக்களுக்கும் இடமளிப்பது, நடுநிலையாக செய்திகளை வெளியிடுவது போன்ற அம்சங்களே தமிழக மக்கள் மனதில் தோன்றும். அந்த நம்பிக்கையை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கடமை உணர்வுடன் இயங்கி வரும் தந்தி டி.வி. தொடர்ந்து இயங்க வேண்டும்.
மக்களை அரசியல்படுத்துவது, அறவழிபடுத்துவதில், இன்றைய ‘டிஜிட்டல்' உலகத்தில் செய்தி ஊடங்களின் பங்கு தவிர்க்க முடியாததாக மாறியிருக்கிறது. அத்தகைய மகத்தான பணிக்காக தந்தி டி.வி.யில் உழைத்துவரும் ஆசிரியர் குழுவினர், ஊடகத்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். ‘தினத்தந்தி'யின் வெற்றிப்பாதையில் பயணித்து வரும் தந்தி டி.வி., மக்கள் நலனில் அக்கறையோடும், அறத்தோடும் தொடர்ந்து செயல்பட நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ராகுல்காந்தி
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘14-வது ஆண்டு விழாவை கொண்டாடும் தந்தி டி.வி.க்கு வாழ்த்துக்கள். ஊடகத்துறை மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை கொண்டிருக்கும் தந்தி டி.வி.யின் ஒட்டுமொத்த குழுவுக்கும் எனது வாழ்த்துக்கள். அறிவுசார் செய்திகளை மக்களுக்கு வழங்குவதிலும், மக்கள் மன்றத்தில் ஆரோக்கியமான கருத்துருவாக்கத்திற்கும் தந்தி டி.வி.யின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது' என்று கூறியுள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘14-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் தந்தி டி.வி.க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தந்தி டி.வி. தமிழ் ஊடக உலகின் நம்பகமான குரலாக உள்ளது. விவாதங்களுக்கான களமாக தந்தி டி.வி. மிகுந்த அர்ப்பணிப்புடன் தொடர்ந்து இயங்கி வருவது பாராட்டத்தக்கது.
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக சாமானிய மக்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை பாதிக்கும் விவகாரங்களில் கவனம் செலுத்தி வரும் தந்தி குழுமத்திற்கு எனது சார்பாகவும், காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும் வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘14-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் தந்தி டி.வி.யின் பணிகள் மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்.
13 ஆண்டுகளாக தந்தி டி.வி.யின் சேவை மக்கள் மனநிறைவு பெறும் வகையில் உள்ளது. அது தொடர்வதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ‘தினத்தந்தி' நாளிதழ் போல் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் தந்தி டி.வி., பல தரப்பு மக்களும் பார்க்கும் செய்திகளை நடுநிலையோடு தெரிவித்து வருவதற்கு வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.