‘பாதுக்காக்கப்பட்ட வனங்களின் பரப்பளவு 135 சதுர கி.மீ. விரிவடைந்துள்ளது’ - வனத்துறை தகவல்
காப்பு வனங்கள் அறிவிக்கப்பட்டது தொடர்பான நினைவு சிறப்பு பதிப்பை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளியிட்டார்.;
சென்னை,
தமிழ்நாட்டில் பாதுக்காக்கப்பட்ட வனங்களின் பரப்பளவு 135 சதுர கி.மீ. விரிவடைந்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு அரசு 2021-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை மாநிலம் முழுவதும் 100 புதிய காப்பு வனப்பகுதிகளை அறிவித்தது. இந்த நடவடிக்கை வனப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்புகள் மூலம் காலநிலை தாங்குதிறனை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
காப்பு வனங்களின் விரிவாக்கமானது, ஒன்றோடொன்று தொடர்புடைய உயிரியல் பல்வகைப் பாதுகாப்பையும், காலநிலைச் செயல்பாடுகளையும் வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சட்டபூர்வமான இக்காப்பு வனங்கள் முக்கிய வனஉயிரின வாழ்விடங்களை பாதுகாத்து, சற்றுசூழல் வழித்தடங்களை உறுதிப்படுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்கின்றன.
இதன் மூலம் கார்பன் சேமிப்பு அதிகரித்து, காலநிலை மாற்றத்திற்கெதிரான சூழலியல் தாங்குதன்மையும் மேம்படுகிறது. ஆகவே, நிரந்தர வனப் பாதுகாப்பு என்பது உயிரியல் பல்வகை பாதுகாப்பு, நீர்வள பாதுகாப்பு மற்றும் காலநிலை நிலைத்தன்மை ஆகியவற்றிற்கு ஒரே நேரத்தில் பங்களிக்கும் இயற்கை அடிப்படையிலான தீர்வாக விளங்குகிறது.
இந்த அறிப்பின் விளைவாக, கடந்த 4 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள பாதுக்காக்கப்பட்ட வனங்களின் பரப்பளவு சுமார் 135 சதுர கிலோமீட்டர் அளவிற்கு விரிவடைந்துள்ளது. திண்டுக்கல், தர்மபுரி, மதுரை, கள்ளக்குறிச்சி, தேனி, சிவகங்கை, நாமக்கல், நீலகிரி, சேலம் மற்றும் தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில், 13,494.95 ஹெக்டேர் பரப்பளவில் புதிதாக அறிவிக்கப்பட்ட இக்காப்பு வனங்கள் பரவியுள்ளன. இவற்றுள், புதிதாக அறிவிக்கப்பட்ட தேனி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் வனவட்டாரமானது 2,836.33 ஹெக்டேர் பரப்பளவுடன் கூடிய மிகப்பெரிய வனவட்டாரமாகும்.
இந்த 100 புதிய காப்பு வனங்கள் அறிவிக்கப்பட்டதை ஆவணப்படுத்தும் விதமாக நினைவு சிறப்பு பதிப்பை வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளியிட்டார். இந்த நிகழ்வின்போது, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியாசாகு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) ஸ்ரீநிவாஸ் ஆர்.ரெட்டி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக்காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான சிறப்புச்செயலாளர் அனுராக் எஸ்.மிஸ்ரா ஆகியோர் பங்கேற்றனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.