மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

மேயராக இருந்தபோது, சிட்கோ நிலத்தை மனைவி பெயருக்கு மாற்றம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.;

Update:2025-05-23 12:40 IST

சென்னை,

போலியான ஆவணங்களை பயன்படுத்தி நிலத்தை அபகரித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு வேறு நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், இன்று நடைபபெற இருந்த குற்றச்சாட்டு பதிவு தள்ளி வைக்கப்பட்டது.

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோ நிலத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியம் மற்றும் அவரின் மனைவி காஞ்சனா மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு காவல்துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது.

இந்த வழக்கு தற்போது சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ., மீதான குற்ற வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் உள்ளது.தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மா.சுப்பிரமணியன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.மோசடி வழக்கை கடந்த முறை விசாரித்த எம்பி, எல்எல்ஏ கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்றும் அவரின் மனைவி மீது மே23-ந் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தின் வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேங்கடவரதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன் கூட்டியே திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 17-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தின் வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டதால் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டு பதிவு நடத்தப்படாமல் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்