மனைவியை பிரசவத்துக்கு அழைத்து வந்த இடத்தில்.. தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்
கடந்த வாரம் வாலிபர்கள் இருவருக்கும் இடையே மதுபோதையில் வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.;
கைதான விக்னேஷ்
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 30). இவர் தனது மனைவி ரஞ்சனாவுடன் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில் அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியானார். இதற்காக அவர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பகால பரிசோதனை மற்றும் ஆலோசனை பெற்று வந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு விஜய் தனது மனைவியை பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது வயிற்றில் இருக்கும் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்த போது குழந்தையின் தலை திரும்பி இருந்ததால் டாக்டர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்கு செல்லுமாறு கூறினர்.
இதையடுத்து விஜய் தனது மனைவி ரஞ்சனாவை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து பிரசவ வார்டில் அனுமதித்தார். அதே வார்டில் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிக்கோணாம்பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான விக்னேஷ் (23) என்பவர் தனது மனைவி கீர்த்திகாவையும் அனுமதித்து இருந்தார். இதனால் விஜய்க்கும், விக்னேசுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகினர்.
இந்தநிலையில் கடந்த வாரம் விஜய்க்கும், விக்னேசுக்கும் இடையே மதுபோதையில் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது விஜய், விக்னேசை தாக்கி உள்ளார். இதனால் விக்னேஷ், விஜய் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார். இதற்கிடையே விக்னேஷ் மனைவிக்கு குழந்தை பிறந்தது. இதனால் அவர்கள் வீடு திரும்பினர். ஆனாலும் விக்னேசுக்கு, விஜய் மீது இருந்த ஆத்திரம் அடங்கவில்லை.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் கோவை அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டுக்கு விக்னேஷ் வந்தார். அப்போது அவர் விஜய்யை நேரில் சந்தித்து உங்களிடம் பேச வேண்டும் என்று கூறி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கோவில் அருகே அழைத்து சென்றார். அங்கு சென்றதும் விக்னேஷ், விஜய்யிடம் எங்கோ இருந்து வந்து என் மீது கை வைக்கிறாயா? என கேட்டு தகராறில் ஈடுபட்டார். மேலும், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென விஜய்யை சரமாரியாக குத்தினார்.
இதை சற்றும் எதிர்பாராத விஜய் நிலைகுலைந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் விஜய்யை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை வார்டுக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விஜய்யை கத்தியால் குத்தி கொன்ற விக்னேசை அங்கு இருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் கைது செய்யப்பட்டார்.
விஜய் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது மனைவி ரஞ்சனா துடித்துபோனார். அவரது உடலை பார்த்து கதறி அழுந்தார். இது அங்கு இருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.