சாதனை மேல் சாதனை படைப்பதுதான் திராவிட மாடல் அரசு - மு.க.ஸ்டாலின் பெருமிதம்

திராவிட மாடல் அரசின் சாதனைகளால் தமிழகம் தலைநிமிர்ந்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.;

Update:2026-01-24 10:09 IST

சென்னை,

சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது;


ஆட்சி பொறுப்பு 

"2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக வெற்றி பெற்றபோது, ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், இன்னொரு பக்கம் எனக்கு கவலையும் இருந்தது. அதை நான் மறைக்க விரும்பவில்லை. இந்தப் பொறுப்பை நான் எப்படி செய்யப் போகிறேன்? வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? மக்கள் விரும்பக்கூடிய வகையில் ஆட்சி நடத்த முடியுமா? மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா? என்ற கவலைதான் எனக்கு இருந்தது.

முந்தைய பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து வகையிலும், அனைத்து துறையிலும் மிக மோசமான பின்னடைவை சந்தித்து, மோசமான நிலையை அடைந்திருந்தது. அதை சரி செய்தாகணும். அடுத்து நமக்கு மேலே இருக்கக்கூடிய ஒன்றிய அரசு, அது ஒத்துழைக்காத ஒரு ஓரவஞ்சனை அரசாக இருந்தது. இந்த ரெண்டு நெருக்கடிகளையும் எதிர்கொள்ளணும் என்பதுதான் எனது கவலைக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது. 'இடியாப்பச் சிக்கல்'னு சொல்லுவாங்க, அப்படியான சூழல்ல தான் நாங்க ஆட்சிக்கு வந்தோம். அதனால்தான் கவலை கொண்டவனாக நான் இருந்தேன்.

ஆனா இப்போ, 5 ஆண்டுகள் கடந்த நிலையில் நான் சொல்றேன், நான் மிக மகிழ்ச்சியா இருக்கேன். இன்னும் சொன்னா மிக மிக மகிழ்ச்சியா இருக்கேன். என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணம், மக்கள் மகிழ்ச்சியா இருக்காங்க. என்னுடைய இலக்குல நான் வென்றுவிட்டேன். திராவிட மாடல் அரசின் சாதனைகளால தமிழ்நாடு தலைநிமிர்ந்துடுச்சு. மக்கள் மனநிறைவு அடையும் வகையில் ஆட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

இன்னைக்கு தமிழ்நாடு மத்த மாநிலங்களை விட அதிகம் வளர்ந்திருக்கு. இந்தியாவின் மத்த மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டை அண்ணாந்து பார்க்கிறாங்க. அதுக்கு காரணம் நம்முடைய திட்டங்கள். நாம செஞ்சிட்டு இருக்கக்கூடிய சாதனைகள் இதெல்லாம்தான் என் மகிழ்ச்சிக்கு காரணம். அடுத்து இன்னும் பெருமையோட, கான்பிடென்ட்டா (Confident) சொல்றேன், நாங்க அமைக்கப்போற 'திராவிட மாடல் 2.0' ஆட்சி, எங்க சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவுக்கு இருக்கும்.

திமுக அரசின் சாதனைகள் 

ஆட்சி பொறுப்பேற்றதும் நான் போட்ட முதல் கையெழுத்தே, மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணத்துக்குத்தான். இந்தப் பயணங்களால நாள்தோறும் 800 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை ஒவ்வொரு மகளிரும் சேமிக்கிறாங்க. இதன் மூலமா 2021 மே மாசத்துல இருந்து இப்ப வரை தோராயமா 60,000 ரூபாய் வரை சேமிச்சிருக்காங்க. பெண்களுக்கான மிகப்பெரிய சமூக பொருளாதார பலத்தை இந்தத் திட்டம் வழங்கியிருக்கு.

அடுத்து 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்'. ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குகிறோம். இந்தத் திட்டத்துல இதுவரைக்கும் ஒவ்வொரு மகளிருக்கும் 29,000 ரூபாயை கொடுத்திருக்கிறோம். அந்தப் பெண்கள் எல்லாரும் 'எங்க அண்ணன் கொடுக்கிற மாதாந்திர சீர்'னு பெருமையோடு சொல்றாங்க.

அரசு ஊழியர்கள்.. அந்த அரசு ஊழியர்களுடைய 23 ஆண்டுகால கோரிக்கையான 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை' அறிவிச்சிருக்கிறோம். நாம ஆட்சிக்கு வந்தப்போ அரசு ஊழியர்களுக்கு 17 விழுக்காடாக இருந்த அகவிலைப்படியை, இப்போ 58 விழுக்காட்டின் அளவுக்கு உயர்த்தி வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகள்ல மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டிருக்கு. 2 லட்சம் பேருக்கு கலைஞர் கனவு இல்லம் வீடுகள். 22 லட்சத்து 71 ஆயிரம் ஏழை எளிய குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா.

4000 கோயில்களுக்கு குடமுழுக்கு. 8000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்கள் எல்லாம் மீட்கப்பட்டிருக்கு. 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகள் ஈர்ப்பு. 'தாயுமானவர்' திட்டத்துல மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 27 லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள். 5700 கோடி ரூபாய் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஒதுக்கீடு.

சாதனைக்கு மேல் சாதனை

இந்த அரசைப் பொறுத்தவரைக்கும் ஒரு சாதனை செஞ்சா, அதை மிஞ்சுறதா இன்னொரு சாதனை வரும். அடுத்து அதை மிஞ்சுறதா மற்றொரு சாதனை வரும். இப்படி சாதனைக்கு மேல் சாதனை.. சாதனைகளை படைக்கிறதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு.

இன்னையோட நான் பொறுப்பேற்று, இந்த அரசு பொறுப்பேற்று 1724 நாள் ஆகுது. இந்த 1724 நாட்கள்ல 8685 நிகழ்ச்சிகள்ல நான் கலந்துகிட்டு இருக்கேன். 15,117 அரசுக் கோப்புகள்ல கையெழுத்திட்டு இருக்கேன். சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு 173 முறை பயணத்தை நான் மேற்கொண்டிருக்கிறேன். அதுலயும் 71 மாவட்ட மாபெரும் அரசு நலத்திட்ட விழாக்கள்ல பங்கேற்று 44 லட்சத்து 44 ஆயிரத்து 721 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறேன். அது இல்லாம அடிக்கல் நாட்டுனது, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்ததுனு எல்லாத்தையும் புள்ளிவிவரத்தோட என்னால சொல்ல முடியும்.

எதிராக செயல்படும் கவர்னர் 

ஆனா தமிழ்நாட்டிற்காக, தமிழ்நாட்டினுடைய நலனுக்காக செயல்பட வேண்டிய ஆளுநர் அவர்கள் தமிழ்நாட்டுக்கு எதிரா, மக்களுக்கு பாடுபடக்கூடிய நமக்கு எதிரா தொடர்ந்து செயல்படுவதுதான் நமக்கு உள்ளபடியே வேதனையா இருக்கு. ஆளுநர் உரை தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுறதும், முடிவுறும் போது நாட்டுப்பண் பாடுறதும்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தினுடைய மரபு. முதலிலேயே நாட்டுப்பண் பாடவில்லை என்பதை திரும்பத் திரும்ப குற்றச்சாட்டா அவர் சொல்லிட்டு வர்றாரு. இந்த நாட்டின் மீதும், நாட்டுப் பண் மீதும் அளவற்ற பெருமதிப்பை, மரியாதையை கொண்டுள்ளவர்கள் நாங்கள். தேசிய ஒருமைப்பாட்டிலேயும், நாட்டுப்பற்றிலேயும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல நாங்கள் என்பதை இந்தப் பேரவை உறுப்பினர்கள் சார்பா ஆளுநர் அவர்களுக்கு அழுத்தம் திருத்தமா நான் சொல்லிக்க விரும்புறேன்.

யாரும் எங்களுக்கு தேசபக்தி குறித்து பாடம் எடுக்கிற நிலையில நாங்களும் இல்ல. தேசபக்தி பாடம் எடுக்கக்கூடிய அளவுக்கு இந்த தேசத்துக்காக அவங்க போராடியவங்களும் இல்ல. ஜனநாயக தேசத்தின் அரசியலமைப்பு மாண்பை எதேச்சதிகாரத் தன்மையோட மாற்ற நினைப்பவர்கள் தான், இந்தக் காலகட்டத்துல தேச விரோதிகள், அவங்க யாருன்னு நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.

இது பேரறிஞர் பெருந்தகை அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், இன்னும் சொன்னால் மக்கள் திலகம் எம்ஜிஆரும், அம்மையார் ஜெயலலிதா அவர்களும் எதிர்கொள்ளாத நெருக்கடி இது. அவங்க காலத்துல இருந்த ஆளுநர்கள் கூட இப்படி இல்ல. ஆனா முரண்பாடுகள் இதயத்தில் இருந்தாலும், அதை ரணமாக்கும் வகையில் செயல்பட்டது இல்ல. அந்த வகையில் அளவுக்கு அதிகமான சோதனைகளை எதிர்கொண்டவனாக நான் நின்றுகொண்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்