மீனவர்கள் வாழ்வாதாரத்தை காக்க கச்சதீவு மீட்புதான் ஒரே வழி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை திருவொற்றியூரில் மீன்பிடித் துறைமுகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்.;

Update:2025-05-28 12:07 IST

சென்னை,

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நெரிசல் அதிகமானதையடுத்து கில்நெட் வலை மூலம் பிடிக்கப்படும் சூரை வகை மீன்பிடிக்கும் விசைப் படகுகளைக் கையாள்வதற்கான பிரத்யேக மீன்பிடித் துறைமுகம் திருவொற்றியூரில் ரூ. 272 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய மீன்பிடித் துறைமுகத்தைத் திறந்து வைத்து, 2,000 மீனவர்களுக்கு ரூ. 242 கோடியில் நுண்கடன், பாக் நீரிணைப்பு மீனவர்களுக்கான சிறப்பு வாழ்வாதாரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

 மேலும் ராமநாதபுரம் தங்கச்சிமடம், ரோச்மா நகர் மீனவ கிராமங்களில் மீன் இறங்கு தளங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சூரை மீன்பிடித் துறைமுகம் திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வழங்கும் தொகை ரூ. 8 லட்சமாக உயர்த்தப்படும்.புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. நாம் எடுத்த நடவடிக்கைகளால் இதுவரை 1,154 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு மீட்கப்பட்டனர்.

இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரிக்கு இதுவரை 76 கடிதங்களை எழுதியுள்ளேன். தொடர் வலியுறுத்தல் காரணமாக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 23 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மீனவர்களின் இன்னல்களை போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி

கச்சத்தீவை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.அதனால்தான் கச்சத்தீவை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவோற்றியுள்ளோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்