தாயிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட மகன்.. அடுத்து நடந்த கொடூரம்
தாயிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால், தந்தைக்கும், மகனுக்கும் இடையே விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.;
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 48). இவர் சொந்தமாக நெல் அறுவடை செய்யும் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு ரேவதி, உமா என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி ரேவதிக்கு ராசுக்குட்டி(20) என்ற மகன் உள்ளார். ராசுக்குட்டி நெல் அறுவடை எந்திரத்தின் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் ராஜாவுக்கும், முதல் மனைவி ரேவதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதை ராசுகுட்டி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராசுகுட்டியின் சட்டையை ராஜா தீ வைத்து எரித்துள்ளார்.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு அ.மேட்டூரில் ராசுக்குட்டி மற்றும் அவரது நண்பர்கள் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். பின்னர் இரவில் கோவில் அருகே ராசுக்குட்டி படுத்து தூங்கியுள்ளார். இதனைக்கண்ட ராஜா நள்ளிரவில் இரும்பு கம்பியால் ராசுக்குட்டியை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே ராசுக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து ராஜா தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராசுக்குட்டியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். மேலும் அவரது 2-வது மனைவி உமாவை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.