எஸ்.ஐ.ஆரை செயல்படுத்தி எதிர்காலத்தில் குடியுரிமையை கேள்விக்குறியாக்கும் ஆபத்து இருக்கிறது - கனிமொழி எம்.பி

தூத்துக்குடியில் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.;

Update:2025-11-21 14:45 IST

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அறக்கட்டளை மூலம் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தின் திறப்பு விழா இன்று (21/11/2025) தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி, 1 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை நீச்சல் வீரர்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் க.இளம்பகவத் தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

திமுக தொடர்ந்து மாநில உரிமைகளுக்காக அண்ணா, கலைஞர் முதல் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு இயக்கமாக இருக்கிறது. குறிப்பாக, சொல்ல வேண்டும் என்றால் மத்திய பாஜக ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து, ஒவ்வொரு மசோதாவின் வழியாகவும், எந்தெந்த வழியில் வாய்ப்புகள் கிடைக்கிறதோ அந்தந்த வழிகளில் மாநில உரிமைகளை பறிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறது.

மாநிலங்களுக்கு தரவேண்டிய நிதி பகிர்வை சரியாக தருவதில்லை. மாநிலங்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகள், தற்போது மதுரை, கோவைக்கு மெட்ரோ திட்டம் கேட்கப்பட்டது வரை நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி பல வகைகளில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. இதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். நமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காக போராடுவோம்.

எஸ்.ஐ.ஆரை கொண்டு வந்து, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், அங்கு இருக்கக்கூடிய வாக்காளர்களின் வாக்குரிமையை பறித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அவசர கதியில் எஸ்.ஐ.ஆரை செயல்படுத்த வேண்டிய அவசியமே இல்லாத காலத்தில் இதை செயல்படுத்துகின்றனர். இதன் மூலம் மாநிலத்தின் உரிமைகளை பறிக்கவும், எதிர்காலத்தில் குடியுரிமையை கேள்விக்குறியாக்கும் ஆபத்தும் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்