சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை; தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வி சீரழிவு - அன்புமணி ராமதாஸ் தாக்கு
தமிழக பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலைக்கு தி.மு.க. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“நவீன இந்தியாவின் முதல் பல்கலைக்கழகமான சென்னை பல்கலைக்கழகத்தில் 65 சதவீதம் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 5 ஜனாதிபதிகளை இந்தியாவுக்கு வழங்கிய சென்னை பல்கலைக்கழகத்தில் இப்போது பாடம் நடத்துவதற்கு கூட ஆளில்லாத நிலையை தி.மு.க. அரசு ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் அருண்குமார் என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின்படி பெற்றுள்ள தரவுகளை சுட்டிக்காட்டி ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சென்னை பல்கலைக்கழகத்தில் மொத்தமுள்ள 515 ஆசிரியர் பணியிடங்களில் 180, அதாவது 35% இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன; மீதமுள்ள 335, அதாவது 65% பணியிடங்கள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
94 பேராசிரியர்கள் பணி செய்ய வேண்டிய இடத்தில் வெறும் 63 பேர் மட்டுமே உள்ளனர். அவர்களிலும் கணிசமானவர்கள் அடுத்த சில ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ளனர். 127 இணைப் பேராசிரியர்களில் வெறும் 20 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மீதமுள்ள 85% பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல், 294 உதவி பேராசிரியர் பணியிடங்களில் 197 இடங்கள், அதாவது 67% பணியிடங்கள் இன்றைய நிலையில் காலியாக கிடக்கின்றன.
துறைவாரியாகப் பார்த்தால் சென்னை பல்கலைக்கழகத்தில் மொத்தமுள்ள 71 துறைகளில் 16 துறைகளில் தலா ஒரே ஒரு ஆசிரியரும், 22 துறைகளில் தலா இரு ஆசிரியர்களும் மட்டுமே உள்ளனர். எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதன் நிர்வாகப் பணிகளை கவனிக்க ஓர் ஆசிரியர் தேவை. அதன்படி பார்த்தால் 16 துறைகளில் பாடம் நடத்த ஆசிரியர்களே இருக்க மாட்டார்கள்; 22 துறைகளில் தலா ஒரே ஒரு ஆசிரியர் தான் இருப்பார்.
இவ்வளவு குறைவான ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாது. அதனால், ஒரு நாளைக்கு ஒவ்வொரு வகுப்புக்கும் 6 முதல் 7 பாடவேளைகள் நடத்தப்பட்டு வந்த நிலை மாறி, தினமும் 3 பாடவேளைகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. அதற்கும் கூட போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில், தினமும் குறைந்தது ஒன்று அல்லது இரு பாடவேளைகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுகின்றன.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1857 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பல்கலைக்கழகமாக சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதன்பின் 168 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்று வரை பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லாமல் வகுப்புகள் ரத்து செய்யப்படும் நிலை சென்னை பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டதில்லை. ரூ.30,000 ஊதியத்தில் அமர்த்தப்பட்டிருக்கும் கவுரவ விரிவுரையாளர்களாக தான் தினமும் ஓரிரு வகுப்புகளாவது நடைபெறுகின்றன.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமன், அப்துல்கலாம், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவரெட்டி ஆகிய 5 ஜனாதிபதிகள், நோபல் பரிசு வென்ற சர். சி.வி ராமன், கணிதமேதை ராமானுஜன் உள்ளிட்டோரை உருவாக்கிய சென்னைப் பல்கலை. பாடம் நடத்துவதற்குக் கூட ஆளில்லாமல் முடங்கிப் போகும் என்று அதை உருவாக்கியவர்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த அவல நிலைக்குக் காரணம் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக துணை வேந்தர்கள் நியமிக்கப்படாததும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்கும் அளவுக்கு பல்கலைக்கழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படாததும்தான். சென்னை பல்கலைக்கழகத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் கூறப்படும் காரணம், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் அவர்களுக்கு ஊதியம் வழங்க பல்கலைக்கழகத்தில் நிதி இல்லை என்பதுதான். இந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும் அதுதான் உண்மை ஆகும்.
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தவும், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கவும் மாணவர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அந்த நிதி பல்கலைக்கழகத்தின் பிற செலவுகளுக்கு திருப்பி விடப்படுவதால், மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களையும், தற்காலிகப் பட்டச் சான்றுகளையும் அச்சடிப்பதற்கு கூட நிதி இல்லை. அதனால் நடப்பாண்டில் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
இன்னொருபுறம், பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பயன்களை வழங்க நிதி இல்லை. இது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்ததையடுத்து, பல்கலைக்கழகத்தின் இரு கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.45.6 கோடி வைப்புத்தொகையை திரும்பப் பெற்றும், அரசிடமிருந்து ரூ.50 கோடியை பெற்றும், 465 ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.95.44 கோடி நிலுவைத் தொகையில் முதல் கட்டமாக ரூ.57.12 கோடியை நிர்வாகம் வழங்கியுள்ளது. மீதமுள்ள ரூ.38.31 கோடியை வழங்க மற்ற வைப்புத் தொகைகள் முதிர்ச்சியடையும் காலத்திற்காக பல்கலைக்கழக நிர்வாகம் காத்திருக்கிறது. இத்தகைய சூழலில் புதிய பேராசிரியர்களை நியமிப்பதற்கான வாய்ப்புகளே இல்லை என்று கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு உபரி நிதி இருந்து வந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தின் வருவாய் குறைந்து, செலவுகள் அதிகரித்து விட்ட நிலையில், ஊதியம் வழங்குவதற்கே வைப்புத் தொகையாக வைக்கப்பட்டிருந்த உபரி நிதிதான் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போதே ஊதியம் வழங்க பல்கலைக்கழகத்திடம் நிதி இல்லாத நிலையில், வைப்பு நிதிகளும் வேகமாக குறைந்து வரும் நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட எந்த பல்கலைக்கழகத்தையும் நடத்த முடியாத நிலை உருவாகி விடும்.
கடந்த பல ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்கப்படாததுதான். பல்கலைக்கழகங்களை மீட்டெடுக்கப்போவதாகக் கூறி அதிகாரத்துக்கு வந்த தி.மு.க.வின் ஆட்சியில்தான் பல்கலைக்கழகங்களின் நிதி நெருக்கடியும், சீரழிவுகளும் அதிகரித்தன. அந்த வகையில் தமிழக பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலைக்கு தி.மு.க. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
பல்கலைக்கழகங்களை சீரழித்த பாவத்திற்கு பரிகாரம் தேடும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பிற பல்கலைக்கழகங்களின் நிதி நிலையை சீரமைக்க சிறப்புத் திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும். அதை செய்யத் தவறினால் வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவர்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.