சாதி வெறி, தீண்டாமை ஒடுக்குமுறைகளுக்கு தமிழகத்தில் இடமில்லை - செல்வப்பெருந்தகை

சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் குரல் தொடர்ந்து ஒலிக்கும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்;

Update:2025-11-28 18:19 IST

 

திருப்பூர் அவிநாசியில் அரசு பள்ளி சமையலர் மீது சாதிய ரீதியில் தாக்குதல் நடத்திய வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகள் 6 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், சாதி வெறி, தீண்டாமை ஒடுக்குமுறைகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

'திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அரசு பள்ளி சமையலர் பாப்பாள் மீது நிகழ்த்தப்பட்ட தீண்டாமை வன்கொடுமை வழக்கில், நீதிமன்றம் இன்று வழங்கிய தண்டனைத் தீர்ப்பை வரவேற்கின்றேன்.

சாதி அடிப்படையிலான பாகுபாடு காட்டி, ஒரு பெண்ணின் வேலை உரிமையை மறுக்கப்பட்ட சம்பவம், மனிதநேயத்திற்கும் சமூக நீதிக்கும் விரோதமாக இருந்தது. அந்த அநீதிக்கு எதிராக, SC/ST (Prevention of Atrocities) Act அடிப்படையில் நீதிமன்றம் தக்கத் தண்டனையை வழங்கியிருப்பது, சட்டத்தின் மேன்மையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்த தீர்ப்பு, சாதி வெறி மற்றும் தீண்டாமை நடைமுறைகள் வழங்கியிருப்பது, 'அத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு தமிழகத்தில் இடமில்லை' என்ற தெளிவான செய்தியை வழங்குகிறது.

அத்துடன், இந்த வழக்கு ஆறு ஆண்டுகள் நீண்டதற்குக் காரணமான நிர்வாக தாமதங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இனி இப்படிப்பட்ட வழக்குகள் விரைவாக, பயனுள்ளதாக நிறைவேற்றப்படும் வகையில் அரசு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

திருமிகு பாப்பாள் அவர்களுக்கு இது ஒரு தனிப்பட்ட நீதி மட்டுமல்ல. சாதியால் பாதிக்கப்படும் ஒவ்வொரு மனிதருக்கும், இந்த தீர்ப்பு ஒரு நம்பிக்கையின் ஒளிக்கதிராகும்.

இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு, சமூக நீதி மற்றும் சமத்துவ மதிப்புகளை ஆதரவாக உள்ளது. இதுபோன்ற தீண்டாமை செயல்களை முழுமையாக ஒழிக்க, சட்டப் பாதுகாப்பு, கல்வி விழிப்புணர்வு, சமூக மாற்றம் ஆகியவை இணைந்து செயல்படவேண்டும்.

நீதியின் மீது மக்களின் நம்பிக்கையை உயர்த்தும் இந்த தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்கிறேன். சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் எங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கும்.'

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்