திருப்பரங்குன்றம் விவகாரம்: நயினார் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2025-12-05 07:51 IST


திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “திருப்பரங்குன்றம் மலை சுற்றுப்பகுதியில் மதுரை மாவட்ட கலெக்டர் அமல்படுத்தி உள்ள 144 உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் இன்று (அதாவது நேற்று) இரவு 7 மணிக்குள் ராம ரவிக்குமார் உள்ளிட்ட 10 பேர் குழுவினரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உரிய வசதிகளை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செய்து தர வேண்டும்.

தீபம் ஏற்றிய பின்பு, கோர்ட்டின் உத்தரவு முறையாக அமல்படுத்தப்பட்டது தொடர்பான அறிக்கையை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நாளை(அதாவது இன்று) நேரில் ஆஜராகி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார். ஐகோர்ட்டு இவ்வாறு உத்தரவிட்டதும் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டனர்.

இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பா.ஜனதா கட்சியினரும் அங்கு திரள தொடங்கினர். அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா ஆகியோர் திருப்பரங்குன்றம் நோக்கி வந்த நிலையில், 144 தடை இருப்பதால் செல்லக்கூடாது என போலீசார் தடுத்து வைத்திருந்தனர். அதன்படி நயினார் நாகேந்திரன் திருமங்கலம் பகுதியிலும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கும்மங்குடியில் எச்.ராஜாவும் நிறுத்தப்பட்டனர். 144 தடையை கோர்ட்டு ரத்து செய்தது தெரியவந்ததும் அவர்களது வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. அதைதொடர்ந்து அவர்கள் திருப்பரங்குன்றம் நோக்கி வந்தனர்.

திருப்பரங்குன்றம் மலையில் இரவு 7 மணிக்குள் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டதால் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு வந்தனர். இதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவு நகலுடன் வக்கீல்கள், மனுதாரர் ராம.ரவிக்குமார் உள்ளிட்டோர் வந்தனர். ஆனால், போலீசார், மலைக்கான படிப்பாதையை குறுக்காக மறித்து போலீஸ் வாகனத்தை கொண்டு சென்று நிறுத்தினர். இரும்பு தடுப்புகளையும் ஏற்படுத்தினர். யாரையும் முன்னேறிச் செல்ல அனுமதிக்கவில்லை.

இதையடுத்து 2-வது நாளாக தீபம் ஏற்ற போலீசார் அனுமதி மறுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். அவர்களது தரப்பு வக்கீல்கள் கோர்ட்டு ஆணையை காண்பித்து, குறிப்பிட்ட நபர்களை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளிடம் பேச்சுவார்தை நடத்தினார்கள்.

தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா, துணை கமிஷனர் இனிகோ திவ்யன் உள்ளிட்டோர் கூறுகையில், தனி நீதிபதி 144 தடையை ரத்து செய்த உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். நாங்கள் யாரையும் அனுமதிக்க முடியாது. நீங்கள் மீண்டும் கோர்ட்டில் முறையீடு செய்துகொள்ளுங்கள் என்றனர்.

இந்துக்களி்ன் கோரிக்கை மீது ஏன் இவ்வளவு கடுமை காட்டுகிறீர்கள், இது முழுக்க முழுக்க கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை என வக்கீல்கள் தெரிவித்ததால் அந்த பேச்சுவார்த்தையில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. எக்காரணம் கொண்டும் மலையேற அனுமதி கிடையாது என தெரிவித்ததால், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொண்டர்களை கலைந்து செல்லச்சொல்லுங்கள் என அவரிடம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டதும் தீபம் ஏற்றும் வரை நாங்கள் போகமாட்டோம் என இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூறிவிட்டனர். தொடர்ந்து படிப்பாதையை நான் பார்க்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் புறப்பட்டார். அவ்வாறு சென்றால் நாங்கள் கைது செய்வோம் என போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே கைது நடவடிக்கை எடுத்தால் அனைவரையும் ஏற்றிச்செல்வதற்கு வசதியாக அங்கு ஏராளமான பஸ்கள், போலீஸ் வாகனங்கள் கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டவர்கள் படிப்பாதையை நோக்கி சென்றதும் போலீசார் கைது நடவடிக்கை எடுத்தார்கள். அதைதொடர்ந்து இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் பெண்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் திருமண மண்டபங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி சட்டவிரோதமாக அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்