தூத்துக்குடி: காதி கிராப்ட் அங்காடியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை தொடக்கம்
2025-2026-ம் ஆண்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடாக ரூ.165.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.;
காந்தியடிகளின் 157வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சி.சாலையில் அமைந்துள்ள காதி கிராப்ட் அங்காடியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெகடர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர்.
இந்த விழாவில் அமைச்சர்கள் கூறியதாவது:
காந்தியடிகளால் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டுமென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம். தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி ஆகிய இடங்களில் கதர் அங்காடிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட்டும், அவர்களின் பொருளாதாரநிலை உயர்வு செய்யப்பட்டும் காந்தியடிகளின் கொள்கையினை முழுவதுமாக கடைபிடித்து இத்துறையினரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காந்தியடிகளின் 157வது ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் இன்று முதல் சிறப்பு கதர் விற்பனை காலம் முடியும் வரை தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளினால் கதர் ரகங்களுக்கு 30 சதவீதமும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதமும் ஆண்டு முழுவதும் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
அரசு துறைகளில் பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கு தவணைகளில் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2025-2026-ம் ஆண்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடாக ரூ.165.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்குறியீட்டினை அடைந்திட பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அனைவரும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட கதர் துணிகளை பெருமளவில் வாங்கி ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு, உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ் ராம், துணை மேயர் ஜெனிட்டா, தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.