தமிழக அரசின் ஓய்வூதியத் திட்ட அறிவிப்பு: வாக்குறுதியை நம்பி வாக்களித்தவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம் - ஜி.கே.வாசன்
தேர்தல் நெருங்கும் போது ஏமாற்று அறிவிப்பு வெளியிட்டு ஆசிரியர்களை, அரசு ஊழியர்களை நம்ப வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.;
சென்னை,
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் (டி.ஏ.பி.எஸ்.,) என்ற திட்டத்தை செயல்படுத்துவதாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 3-ம் தேதி அறிவித்தார். இதன் மூலம், அரசுக்கு ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அப்படியே அமல்படுத்தாது ஏமாற்றம் அளித்துள்ளது. திமுக 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண். 309 ல் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களிடம் சந்தா பிடிக்காத திட்டம்.
திமுக 2021 தேர்தல் அறிக்கையில் CPS (Contributory Pension Scheme) ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் OPS (Old Pension Scheme) திரும்பக் கொண்டு வருவோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால், நான்கரை ஆண்டுகளுக்குப் பின் வெளியான TAPS (Tamil Nadu Assured Pension Scheme) ஊழியர்களின் மாத சம்பளத்தில் 10% பிடித்தம் செய்ய வேண்டும், அரசு மீதி பொறுப்பேற்கும் என்கிறது. கடைசி சம்பளத்தின் 50% ஓய்வூதியம், DA உயர்வு, 25 லட்சம் பணிக்கொடை ஆகியவையெல்லாம் ஓரளவுக்கு பயன்தரக்கூடியது தான். ஆனால், உண்மையில் இது CPS-ன் சிறு மாற்றம் தான். தற்போது அறிவித்துள்ள தமிழ்நாடு உத்தரவாத ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களிடம் ஓய்வூதியத்திற்காக சந்தா பிடிக்கும் திட்டம். இத்திட்டம் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மறு வடிவமே.
பங்களிப்பு ஓய்வூதியம் என்பது பணத்தைப் பிடித்துக்கொண்டு அதற்கும் வட்டி தருகிறது. அவர்களும் பங்களிப்பு செய்கிறார்கள். அதற்கும் வட்டி தருகிறார்கள். அனைத்தையும் அதாவது முதலீட்டு பணத்தை தருவதாக அமைகிறது. ஆனால் TAPS தராது. இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உத்திரவாத ஓய்வூதியத்தால், பழைய ஓய்வுதியத் திட்டத்தின் முழுப் பயன் கிடைக்காது என்கின்றனர்.
தமிழ்நாடு அரசின் - புதிய - உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட (TAPS) அறிவிப்பு, 2003 முதல் CPS-இல் சிக்கிய லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயல். மேலும் போராட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பதற்கான வேலைகள் தான் இவை.
தமிழக அரசு அறிவித்த ஓய்வூதியத்தில் தொகுத்துப் பெறும் வாய்ப்பு இல்லை. தமிழ்நாடு அரசின் உத்திரவாத ஓய்வூதியத் திட்டத்திற்கு CPS ஒழிப்பு இயக்கத்தினர் உட்பட மற்ற அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். தேர்தல் நெருங்கும் போது ஏமாற்று அறிவிப்பு வெளியிட்டு ஆசிரியர்களை, அரசு ஊழியர்களை நம்ப வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு சுமார் 6 ½ லட்சம் ஆசிரியர்களையும் மற்றும் அரசு ஊழியர்களையும், தேர்தல் கால வாக்குறுதியையும் கவனத்தில் கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.