திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்: விசாரணை நடத்த கவர்னரிடம் வலியுறுத்தல் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
சென்னை கிண்டியில் கவர்னர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.;
சென்னை,
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை புத்தகமாக ஆதாரத்துடன் தயாரித்து வழங்கினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் சென்றனர்.
சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
"இன்றைய தினம் கவர்னரை சந்தித்து 2021 முதல் திமுக ஆட்சியில் நடந்த ஊழல் பட்டியலை வழங்கினோம். கடந்த 4½ ஆண்டில் பல்வேறு துறைகளில் நடந்த ஊழலை அவரிடம் ஆதாரத்துடன் விளக்கினோம். உரிய ஆதாரம் உள்ளதால் உடனடியாக விசாரணை நடத்தவும் கவர்னரிடம் கோரிக்கை வைத்தோம். கடந்த 4½ ஆண்டுகளில் திமுக அரசு கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, தமிழகத்தை கடனில் ஆழ்த்தியுள்ளது. 56 மாதங்களில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. இதுவரை ரூ.4 லட்சம் கோடி கடன் அளவு உயர்ந்துள்ளது.
சபரீசன், உதயநிதி ரூ.30 ஆயிரம் கோடியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளதாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறினார். ஒரு ஆண்டில் இவ்வளவு பணம் என்றால், 4½ ஆண்டில் எவ்வளவு கொள்ளையடித்து இருப்பார்கள்.
விஞ்ஞான முறையில் திமுக ஊழல் செய்து வருகிறது. துறை வாரியாக நடந்த ஊழல் என்று பார்த்தால், நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.64 ஆயிரம் கோடி, சுரங்கத்துறையில் ரூ.60 ஆயிரம் கோடி, டாஸ்மாக் துறையில் ரூ.50 ஆயிரம் கோடி, பத்திரப்பதிவு துறையில் ரூ.20 ஆயிரம் கோடி, தொழில்துறையில் ரூ.10 ஆயிரம் கோடி, வேளாண்மை துறையில் ரூ.5 ஆயிரம் கோடி, விளையாட்டு துறையில் ரூ.500 கோடி, உயர்கல்வித் துறையில் ரூ.1,500 கோடி என பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளது. ஊழலுக்கான ஆதாரத்தையும் கவர்னரிடம் கொடுத்துள்ளோம். ரூ.4 லட்சம் கோடி ஊழலை விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க கோரியுள்ளோம். ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் இந்த விசாரணையை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளோம்.
தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் அண்டை மாநிலம் நோக்கி சென்றுவிட்டன. கிட்னி திருட்டு விவகாரத்தில் திமுக அரசு என்ன செய்தது? சட்டமன்ற தேர்தல் காரணமாக மாணவர்களுக்கு தற்போது லேப்டாப் கொடுத்துள்ளனர். 2021-ல் பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என அன்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் தற்போது பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஏன் ரூ.5 ஆயிரம் அறிவிக்கவில்லை. திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. தோல்வி பயம் காரணமாக அடுத்தடுத்த அறிவிப்புகளை திமுக வெளியிடுகிறது. தமிழகம் போராட்டக்களமாக மாறியுள்ளது. ஊழல் செய்துள்ள திமுக அரசுக்கு சட்டமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். வருகிற தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.”
இவ்வாறு அவர் பேசினார்.