கோவில் விழாவுக்கு மைக்செட் அமைத்தபோது மின்சாரம் பாய்ந்து உடல் கருகி கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி

மின்சாரம் பாய்ந்து காயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.;

Update:2025-04-15 06:46 IST

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள காரிசேரி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா சமீபத்தில்தான் நடந்து முடிந்தது. அந்த கோவிலில் மண்டல பூஜை விழாவுக்காக கிராமத்தில் மைக்செட் மற்றும் மின்விளக்குகள் அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியில் நேற்று அதே கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவர் ஈடுபட்டு இருந்தார்.

இவர்களது வீட்டு அருகேதான் ஒலிபெருக்கி, மின்விளக்குகள் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு ஒயரை தூக்கி மேலே திருப்பதி போட்டு்ள்ளார். அதன் ஒரு முனை அவ்வழியாக செல்லும் மின்கம்பியில் உரசி சிக்கியதால் அந்த ஒயர் வழியாக திருப்பதி மீது மின்சாரம் பாய்ந்தது. உடனே அவர் அலறினார்.

இதைக்கேட்டதும் அவருடைய மனைவியான 7 மாத கர்ப்பிணி லலிதா, பாட்டி பாக்கியம், சகோதரர் தர்மர், உறவினர் கவின்குமார்ஆகியோர் பதறியடித்து அங்கு ஓடிவந்தனர். எல்லோரும் சேர்ந்து திருப்பதியை காப்பாற்ற முயன்றபோது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இந்த விபரீத சம்பவத்தில் திருப்பதி, அவருடைய மனைவி லலிதா, பாட்டி பாக்கியம் ஆகிய 3 பேர் மீதும் தீப்பிடித்து எரிந்தது. உடல் கருகி சம்பவ இடத்திலேயே இந்த 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

காயம் அடைந்த தர்மர், கவின்குமார் ஆகியோர் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு, உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஆமத்தூர் போலீசார் சம்பவம் நடந்த கிராமத்திற்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான 3 பேரின் உடல்களையும் பார்த்து குடும்பத்தினரும், கிராம மக்களும் கதறிய காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது இதுபற்றி ஆமத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்