திருநெல்வேலி: மின்கம்பங்களில் விளம்பர பதாகை கட்டினால் நடவடிக்கை- அதிகாரி எச்சரிக்கை

திருநெல்வேலியில் மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர பதாகைகள், கேபிள் வயர்களை மின் பகிர்மான கழக ஊழியர்களின் துணையோடு உடனடியாக அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-09-21 16:32 IST

திருநெல்வேலி நகர்புற மின் பகிர்மான கழகம் செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்குட்பட்ட திருநெல்வேலி நகர்புற கோட்டத்தின் சுற்று வட்டார பகுதிகளில் பொது மக்களுக்கு மின் விநியோகம் வழங்கிட, நிறைய உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்கம்பங்களும், மின் மாற்றிகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. மின்வாரிய ஊழியர்கள் மற்றும் டான்பினெட் (TANFINET- Tamil Nadu Fiber Network) முதலான துறை சார்ந்த பணியாளர்களுக்கு மட்டுமே பராமரிப்பு பணி நிமித்தமாக இவற்றில் ஏற இறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர வேறு தனியார் நபர்கள் ஏறினால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த நிலையில் மின் கம்பங்களில் தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் சிலர் சட்டவிரோதமாக ஏறி அவற்றில் தங்களின் நிறுவன விளம்பர பதாகைகள் மற்றும் கேபிள் வயர்கள் கட்டி இருப்பது தெரிய வருகிறது. மேலும் இது போன்ற செயல்களால், மின் பகிர்மான கழக பணியாளர்களுக்கு பணியின் போது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதோடு, ஊழியர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் விபத்து மற்றும் விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் ஏற்பட வழி வகுப்பதாக அமைகிறது.

ஆகவே நகர்புறக்கோட்டத்திற்கு உட்பட்ட மின்கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றில் சட்டத்திற்கு புறம்பாக விளம்பர தட்டிகள், அனுமதியற்ற கேபிள்கள் எதனையும் கட்டக்கூடாது எனவும் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் மற்றும் கேபிள் வயர்களை மின் பகிர்மான கழக ஊழியர்களின் துணையோடு உடனடியாக அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் சட்ட ரீதியில் துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்