எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜய் படங்களுடன் தனது அலுவலகத்தில் பேனர் வைத்த செங்கோட்டையன்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜய் படங்களுடன் தனது அலுவலகத்தில் செங்கோட்டையன் பேனர் வைத்த்துள்ளார்.;

Update:2025-11-28 11:13 IST

சென்னை,

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டைன் கடந்த சில நாட்களாக தவெகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதை உறுதிப்படுத்தும் வகையில் செங்கோட்டையன் நேற்று முன்தினம் தலைமை செயலகம் வந்து சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து நேற்று செங்கோட்டைன் விஜய் முன்னிலையில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருடன் முன்னாள் எம்.பி. சத்யபாமா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், வெங்கடாசலம், முத்துக்கிருஷ்ணன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் த.வெ.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை விஜய் வழங்கினார்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அலுவலகம் முன்பு வைத்திருந்த பிளக்ஸ் போர்டு புதிதாக மாற்றப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இருப்பது போன்ற பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் தவெக கொள்கை தலைவர்கள் படங்களும், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. மேலும் செங்கோட்டையன் தனது காரின் முன்பகுதியிலும் தவெக கொடியை வைத்துள்ளார்.

நேற்று செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது “தவெக ஜனநாயக கட்சி. யார் வேண்டுமானாலும், தங்களுக்கு விருப்பப்பட்டவர்களுடைய படத்தை சட்டைப்பையில் வைத்துக் கொள்வதற்கு ஆட்சேபனை கிடையாது. சட்டை பையில் நான் வைத்திருக்கும் ஜெயலலிதா படத்தை மாற்றிவிட்டால், த.வெ.க.வில் இணைந்ததும், இன்றே படத்தை மாற்றிவிட்டீர்களா? என கேட்பீர்கள்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்