திருத்தணி மார்க்கெட்டுக்கு காமராஜர் பெயர் - தமிழக அரசு அறிவிப்பு

திருத்தணி நகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட மார்க்கெட் கட்டடத்திற்கு 'பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி' என பெயர் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.;

Update:2025-03-10 17:04 IST

சென்னை,

காமராஜர் பெயரில் இயங்கி வந்த திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயர் வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மீண்டும் அந்தச் சந்தை காமராஜர் பெயரிலேயே இயங்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதார்.

இந்தநிலையில், திருவள்ளூர் நகராட்சி நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி ம.பொ.சி சாலையில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான காமராஜர் நாளங்காடி 81 கடைகளுடன் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. பழைய மார்க்கெட் தற்போதைய மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லாததாலும், சிதிலமடைந்து மோசமான நிலையில் இருந்ததாலும், பழைய கட்டிடத்தினை இடித்து, அப்புறப்படுத்தி 97 கடைகளுடன் புதியதாக நாளங்காடி கட்டுவதற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை எண்.(4D) 35. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 18.08.2023 வெளியிடப்பட்டது.

அதன்படி, கட்டப்படும் நாளங்காடியின் அனைத்து பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன. புதியதாக கட்டப்பட்டுள்ள நாளங்காடிக்கு "பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி" என்று பெயரிட தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்