ஐ.பி.எல். தொடரில் சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கியது. விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் பெருமளவிலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ரூ.2,000-க்கு மாதாந்திர சலுகை பயணச்சீட்டு அறிமுகம் செய்யும் திட்டம் இன்று நடைபெற்றது. இந்த பயணச்சீட்டை கொண்டு ஏ.சி. பேருந்துகள் உள்பட அனைத்து பேருந்துகளிலும் மாதம் முழுவதும் விருப்பம் போல் பயணம் செய்யலாம்.
இந்த நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ரூ.2,000-க்கு மாதாந்திர சலுகை பயணச்சீட்டை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.66,320-க்கும், ஒரு கிராம் ரூ.8,290-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மதுரையில் திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று சென்னை காவல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று சென்னை மாநகர காவல் ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார்.
தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்துவது, கால் டாக்சி செயலிகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்தப்படும்.
இதன்படி சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 1.5 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என தெரிவித்து உள்ளது. எனினும், மருத்துவமனை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ஆட்டோ இயங்கும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம், ராஜரத்தினம் ஸ்டேடியம், அண்ணா சாலை தாராப்பூர் டவர் போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில், அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் பங்கேற்கின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.