இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
தவெக மாநாட்டில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள்
மதுரை தவெக மாநாட்டு திடலில் அண்ணா, எம்ஜிஆரின் படங்களுடன் கூடிய விஜயின் கட் அவுட் நிறுவப்பட்டுள்ளது. “ வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” என்ற வாசகத்துடன் அண்ணா, எம்.ஜி.ஆரின் படங்களுடன் கூடிய கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.
ஐசிசி மகளிர் உலக கோப்பை: இந்திய அணி அறிவிப்பு
ஐசிசி மகளிர் உலக கோப்பைக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான அணியில் ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ஜெமிமா, ரேணுகா சிங், அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், யாஸ்திகா இடம் பெற்றுள்ளனர்
முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பூஜா வஸ்த்ராக்கர், தொடக்க வீராங்கனை சபாலி வர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அக்டோபர் 5-ம் தேதி கொழும்பு நகரில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. செப். 30ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா, இலங்கையுடன் மோதுகிறது.
சென்னையில் நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு
சென்னை குமரன் நகரில் பிட் புல் ரக நாய் கடித்து படுகாயமடைந்து கருணாகரன் (55) என்பவர் உயிரிழந்துள்ளார். நாயின் உரிமையாளரான பூங்கொடியும் நாய்க்கடியால் கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.35 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1.35 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கடலூரில் மகன், மகளைக் கொலை செய்து தந்தை தற்கொலை
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மகன், மகளைக் கொலை செய்து தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்பப் பிரச்சினையால் மனைவி பிரிந்து சென்றதால் ராஜா (40) என்பவர் தனது 12 வயது மகன் மற்றும் 7 வயது மகள் இருவரையும் தூக்கிட்டு கொலை செய்து, தானும் தற்கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
சென்னை ராஜா அண்னாமலைபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.