இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
கோப்புப்படம்
சி.ஐ.எஸ்.எப் வீரர்களுடன் சென்று மனுதாரர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுமாறு நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை அமர்வில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது. நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் முறையீடு செய்ய தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் இன்று விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில், நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
குரூப் -4 பணிகளில் 645 காலிப்பணியிடங்கள் கூடுதலாக அறிவித்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில்,
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர். வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 25.04.2025 அன்று வெளியிடப்பட்டது. கூடுதலாக 727 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை (26.09.2025) அன்று வெளியிடப்பட்டது. தற்போது மேலும் 645 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை இன்று (03.12 2025) வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 5307 ஆகும்.
2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV பணிகள்) மூலம், கிராம நிர்வாக அலுவலர் இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக), ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 5101 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை மற்றும் பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளன. 2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் (வனக்காப்பாளர். மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக) சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் (3560) ஒப்பிடும்போது, 2025-ம் ஆண்டில் கூடுதலாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பத்திரப்பதிவு வாயிலாக, டிச., 1ல் ஒரே நாளில், 302.73 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.தமிழகத்தில் முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்ய, அதிக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதை கருத்தில் வைத்து, சார் - பதிவாளர் அலுவலகங்களில், பத்திரங்கள் பதிவு செய்ய, நேற்று முன்தினம் கூடுதல் 'டோக்கன்'கள் வழங்க அனுமதிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையில் பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகின. இதனால், முதல் முறையாக, பதிவுத்துறைக்கு, ஒரே நாளில், 302.73 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக, பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை விம்கோ நகர் மெட்ரோவில் பார்க்கிங் பகுதியில் மழையால் வெள்ள நீர்மட்டம் அதிகரித்து வருகிறது மழை வெள்ள நீர்மட்டம் அதிகரிப்பால் பார்க்கிங் செய்தவர்கள் உடனே வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். விம்கோ நகர் ரயில் நிலையத்தில் 4 சக்கர வாகன நிறுத்துமிடம் தற்காலிகமாக மூடப்படுகிறது என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கார்த்திகை தீப திருவிழா நடைபெறும் திருவண்ணாமலையில் தற்போது மிதனமான மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலையில் குடையுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
பாம்பன் பாலம், ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி கடற்படை ஆகிய இடங்களில் பாதுகாப்பு நலன் கருதி ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டு ட்ரோன்களை பறக்கவிட்டு வீடியோ எடுத்த மகாராட்டிரம் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை பிடித்து அவர்களிடம் இருந்து ட்ரோனை பறிமுதல் செய்து காவல்துறையினர் மற்றும் மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.