இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
சென்னை,
சென்னையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுப்பட்டது. இதற்கு அவர் பதில் அளித்ததாவது:-
தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய எதிர்பார்ப்பும், எனது எண்ணமும் இதுதான். நிச்சயம் இந்த கோரிக்கையை தலைவரிடம் எடுத்து சொல்லி சட்டசபை தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை பெற்றுத்தர நான் முயற்சி செய்வேன். மூத்த நிர்வாகிகள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து புதிதாக வரக்கூடிய இளைஞர்களை வழிநடத்த வேண்டும்.
தி.மு.க. அரசு இந்த 4½ ஆண்டுகளில் பெண்கள், இளைஞர்கள், முதியோர், குழந்தைகள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினருக்கும் முதல்-அமைச்சர் பார்த்து பார்த்து பல்வேறு திட்டங்களை கொடுத்து இருக்கிறார்’ இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னை எழும்பூர், வேப்பேரி, சென்ட்ரல், நுங்கம்பாக்கம், பெரம்பூர், புளியந்தோப்பு, வியாசர்பாடி, மாதவாம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், வடக்கு புறநகர் பகுதிகளான எண்ணூர் திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் சென்னையில் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
தமிழகத்திற்கு , நவம்பர் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய 13.78 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. வாஷிங்டன் சுந்தர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் போட்டி ரத்தான நிலையில், 2-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
ரெயிலில் நகை திருடுபோனதாக நாடகம் ஆடி, அதற்கான இன்சூரன்ஸ் பணத்தைப் பெற்று மோசடி செய்வதை வாடிக்கையாகக் கொண்ட தம்பதியை, விழுப்புரம் ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த மகாலிங்கம் - ருக்மணி தம்பதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 140 கிராம் நகைகள், ரூ.30.80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்காகச் சென்ற வாக்குச்சாவடி அலுவலரைக் கடித்த வீட்டு வளர்ப்பு நாய். வீட்டின் உரிமையாளர் வேண்டுமென்றே நாயை அவிழ்த்து விட்டதாக வாக்குச்சாவடி அலுவலர் குற்றம்சாட்டி உள்ளார்.
ஈரோடு: நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போக்சோ குற்றவாளி கார்த்தி, முதல் மாடியில் இருந்து குதித்து தப்பியோட முயற்சி செய்துள்ளார். இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.