இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-03-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
தனது தாயின் பெயரில் மரக்கன்று நடும் திட்டத்தின் கீழ் மொரீஷியஸ் பிரதமருடன் சேர்ந்து வில்வ மரக்கன்று நட்டார் பிரதமர் மோடி.
ஸ்ரீவைகுண்டம் அருகே 11ம் வகுப்பு மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஏப்ரல் 2ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கடந்த 9 மணி நேரத்தில் 10 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. காலை 8.30 மணி முதல் மாலை 5.30 வரை மழை கொட்டித் தீர்த்துள்ளது. திருவாரூர் - 7 செ.மீ., நாகை - 6 செ.மீ., விருத்தாசலம், பரங்கிப்பேட்டையில் தலா 5 செ.மீ மழைப்பதிவாகி உள்ளது.
கோவையில் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்தர் (வயது 28) என்ற இளைஞர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.
உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்த நிலையில் ஒய் பிரிவு பாதுகாப்பை விஜய் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இனி துணை ராணுவத்தினர் விஜய்யின் பாதுகாப்புக்காக உடன் இருப்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.
பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.15,906 கோடி செலவில் 20 ரெயில் நிலையங்களுடன் புதிய விமான நிலையத்துக்கு மெட்ரோ அமைய உள்ளது. செம்பரம்பாக்கம், தண்டலம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்பத்தூர்,சுங்குவார்சத்திரம் ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன.
கோவை ரயில்வே பணிமனையில் வேலை செய்யும் வடமாநிலத்தை சேர்ந்த ஊழியர்கள், தங்களது சக ஊழியர்களுடன் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
கோவை நீலாம்பூர், காந்திபுரம், உக்கடம், டவுன்ஹால் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.
தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதிபட கூறியுள்ளார்.
லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திவிட்டு தமிழ்நாடு திரும்பிய இளையராஜாவை நேரில் சந்தித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வாழ்த்தினார்.