இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-09-22 09:10 IST


Live Updates
2025-09-22 13:25 GMT

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்தினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாக 2 கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர். எஸ்டேட் வளாகத்தில் உள்ள 2 கிராம மக்கள் சாலைகளை பயன்படுத்த, சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எஸ்டேட் நிர்வாகம் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2025-09-22 13:22 GMT

திருச்சி: திருவெறும்பூர் அருகே கார்மல் கார்டன் பகுதியில் பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் ரவி (30), பிரபு (32) இருவரும் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

2025-09-22 13:20 GMT

நிஜமாகவே மக்கள் பண்டிகையை கொண்டாட வேண்டுமென நீங்கள் (பிரதமர் மோடி) நினைத்தால், பெட்ரோல், டீசல் விலையை ரூ.50 என்றும், சிலிண்டர் விலையை ரூ.350 என்றும் குறையுங்கள். இந்திய அரசு மக்களிடமிருந்து எடுத்துக்கொண்ட ஜி.எஸ்.டி தொகையையும் திருப்பிக் கொடுங்கள். இப்படி செய்தால்தான் முறையாக மக்களால் பண்டிகையை கொண்டாட முடியும் என்று பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ராமராவ் கூறியுள்ளார்.

2025-09-22 12:46 GMT

கேரளா அரூக்குற்றில் தந்தை பெரியாருக்கு ரூ.4 கோடியில் நினைவு மண்டபம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு. வைக்கம் கோவில் நுழைவு போராட்டத்துக்கு சென்ற தந்தை பெரியார் அரூக்குற்றி சிறையில் இருந்ததன் நினைவாக இம்மண்டபம் அமைக்கப்பட உள்ளது.

2025-09-22 12:43 GMT

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் நண்பரும், வலதுசாரி இளைஞர் அமைப்பாளருமான சார்லி கிர்க், கடந்த 10ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில்,அவரது மனைவி எரிகா கிர்க், தனது கணவரை கொன்றவரை மன்னிப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்

2025-09-22 12:41 GMT

இலங்கை கொழும்புவில் நடைபெற்று வரும் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தெற்காசிய கால்பந்து போட்டியில் பாகிஸ்தான் அணியை 3-2 என்ற கணக்கில் வென்று இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

2025-09-22 12:35 GMT

சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி புறப்பட்டார். அக்டோபரில் தொடங்க உள்ள தனது தேர்தல் சுற்றுப் பயணம் தொடர்பாக அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

2025-09-22 11:41 GMT

பெங்களூரில் இருந்து வாரணாசி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், விமானியின் காக்பிட் அறையின் கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் வாரணாசியில் தரையிறங்கியதும் அவர் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்நபர் முதல் முறையாக விமானத்தில் செல்வதும், தவறுதலாக காக்பிட் கதவை திறக்க முயன்றதும் விசாரணையில் தெரியவர, வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டதுடன் விடுவிக்கப்பட்டார்.

2025-09-22 11:40 GMT

தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக இருக்க |இருமொழிக் கொள்கைதான் காரணம். இந்த மொழிக் கொள்கையில் படித்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கருத்துக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

2025-09-22 11:36 GMT

கேரளாவில் திருமணம் செய்த சிறிது காலத்திலேயே விவாகரத்து செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.ஒரு வருடத்திற்கு சுமார் 1.10 லட்சம் திருமணங்கள் நிகழும் நிலையில், 30,000 விவாகரத்து வழக்குகள் பதிவாவதாக ஆர்.டி.ஐ. தகவல் மூலம் தெரியவந்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்